

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை துண்டு துண்டாக்குவேன் என்று பேசிய உ.பி. காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத் கைது செய்யப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
"உத்தரப் பிரதேசத்தை குஜராத் போல் மோடி மாற்ற முயன்றால், நாங்கள் அவரை துண்டு துண்டாக்குவோம். இதற்காக நான் தாக்கப்படுவேன் என்றோ, கொல்லப்படுவேன் என்றோ பயப்பட மாட்டேன்.
மோடிக்கு எதிராக நான் போரிடுவேன். உத்தரப் பிரதேசத்தை அவர் குஜராத் என நினைக்கிறார். குஜராத்தில் 4 சதவீதம் பேரே முஸ்லிம்கள். ஆனால், உத்தரப் பிரதேசத்தில் 42 சதவீதம் பேர் முஸ்லிம்கள்" என்று இம்ரான் மசூத் பேசியிருந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் சஹரான்பூர் மக்களவை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளரான இம்ரான் மசூத் தான் போட்டியிடும் தொகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மோடிக்கு எதிராக பேசியது, வீடியோ காட்சிகளாக இணையத்தில் பரவியது.
இதன் தொடர்ச்சியாக, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த மசூத், "நான் மிகுந்த எச்சரிக்கையுடன் வார்த்தைகளை பயன்படுத்தியிருக்க வேண்டும். தேர்தல் பிரச்சார அனலில் அவ்வாறு பேசிவிட்டேன்" என்றார்.
இதனிடையே, மசூத் மீது சஹரான்பூர் மாவட்டம், தேவ்பாத் காவல் நிலைத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிந்தது.
இந்நிலையில் அவர் இன்று (சனிக்கிழமை) காலை சஹரான்பூரில் கைது செய்யப்பட்டார். இது குறித்து உ.பி. போலீஸ் ஐ.ஜி. (சட்டம் ஒழங்கு) கூறுகையில், இம்ரான் மசூத் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 295 ஏ, 504, 506 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 125, எஸ்.சி./எஸ்.டி. 310 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
பின்னர், அவரை தியோபந்த் நகர குற்றவியல் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதுடன், அவரது ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, மசூத் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே இம்ரான் மசூத் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திடன் பாஜக தலைவர்கள் புகார் அளித்தனர்.
ராகுல் காந்தி அதிருப்தி
மோடி குறித்து மசூத் பேசியதற்கு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அதிருப்தி வெளியிட்டுள்ளார். மசூத் பெயரைக் குறிப்பிடாமல் ராகுல் காந்தி கூறியது:
"அவர் (மசூத்), எதிர்கட்சித் தலைவர்களுக்கு எதிராக அத்தகைய வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கக் கூடாது. எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக அவர் அப்படி பேசியது, எங்களது கொள்கைக்கு விரோதமானது என்பதை நாட்டுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்" என்றார் ராகுல் காந்தி.