

ராஜஸ்தானில் சிக்கிய தொழிலாளர்கள் மற்றும் புனித யாத்ரீகர்கள் தங்கள் வீடு திரும்ப அஜ்மீரின் காஜா ஷெரீப் தர்கா நிதி அளித்துள்ளது. இதன் உதவியால் ஆயிரக்கணக்கானோர் ரயில் மற்றும் பேருந்துகளில் தம் ஊர்களுக்குக் கிளம்பிச் சென்றுள்ளனர்.
வெளிமாநிலங்களில் சிக்கியவர்கள் தங்கள் வீடு திரும்ப மத்திய அரசு ஏப்ரல் 30-ல் உத்தரவிட்டது. இதையடுத்து ரயில் மற்றும் பேருந்துகளில் கிளம்பிச் செல்லும் தொழிலாளர்களுக்கான கட்டணங்களை செலுத்துவதில் மத்திய அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் பழங்கால வரலாற்றை நினைவுகூரும் வகையிலான ஒரு தகவல் ராஜஸ்தானில் இருந்து வந்துள்ளது. இங்குள்ள அஜ்மீரில் சூபி ஞானியான காஜா மொய்னுத்தீன் சிஷ்தியின் பெயரில் ஒரு பழம்பெரும் தர்கா அமைந்துள்ளது. இதன் சார்பில் ராஜஸ்தானில் இருந்து கிளம்பிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் புனித யாத்ரீகர்களுக்கு கட்டணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அஜ்மீரில் சிக்கிய மேற்கு வங்க மாநிலத்தின் தொழிலாளர்கள் மற்றும் புனித யாத்ரீகர்கள் பலனடைந்துள்ளனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’இணையதளத்திடம் அஜ்மீர் காஜா ஷெரீப் தர்கா நிர்வாகக்குழுவின் தலைவரான அமீன் பட்டான் கூறும்போது, ''மேற்கு வங்கம் சென்றவர்களுக்கு தர்கா சார்பில் சுமார் 1200 பேர் தங்கள் ஊருக்குச் செல்ல ரூ.8.28 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. வழியில் வரும் உத்தரப் பிரதேசத்தின் மொகல்சராய் ரயில் நிலையத்திலும் உணவு, குடிநீர் வழங்கவும் ரயில்வே நிர்வாகத்திற்குத் தனியாக நிதியளிக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.
இதுவன்றி, குஜராத் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் புனித யாத்ரீகர்களுக்கும் அஜ்மீர் தர்கா சார்பில் பேருந்துகள் பேசி அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக தர்கா சார்பில் பூர்த்தி செய்ய வேண்டி விண்ணப்பங்கள் மத வேறுபாடு இன்றி அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த வகையில், அனைத்தும் சேர்த்து தர்கா நிர்வாகக் குழுவினருக்கு இதுவரை ரூ.50 லட்சம் செலவாகியுள்ளது. இதேபோல், புனித யாத்ரீகர்கள் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சிக்கியுள்ளனர். இவர்களில் தமிழகத்திற்கு ஏப்ரல் 14 இல் 3 பேருந்துகளில் கிளம்பிய 127 தமிழர்கள் தலா ரூ.2500 டீசல் செலவு மட்டும் செய்திருந்தனர். இன்று 2 பேருந்துகளில் கிளம்பிய 45 தமிழர்கள் தலா ரூ.8000 வாடகைக் கட்டணமாக அளித்துள்ளனர்.
இந்தத் தொகையைச் செலவிடவும் வசதியில்லாமல், மேலும் சுமார் 300 புனித யாத்ரீகர்கள் வாரணாசியில் சிக்கியிருப்பது நினைவுகூரத்தக்கது.