மக்கள் கைகளில் பணத்தைக் கொடுங்கள்; கெடுதல் ஏதும் நடக்காது; பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த இதுதான் சிறந்த வழி: நோபல் பரிசாளர் அபிஜித் பானர்ஜி ராகுலிடம் ஆலோசனை

ராகுல் காந்தி, அபிஜித் பானர்ஜி : படம் | ஏஎன்ஐ.
ராகுல் காந்தி, அபிஜித் பானர்ஜி : படம் | ஏஎன்ஐ.
Updated on
2 min read

பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுவர வேண்டும், ஊக்கப்படுத்த வேண்டும் என இந்திய அரசு நினைத்தால் லாக்டவுன் முடிந்தபின் மக்கள் கைகளில் பணத்தைக் கொடுத்து செலவிடச் சொல்ல வேண்டும். அதுதான் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த சிறந்த வழி என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அபிஜித் பானர்ஜி ஆலோசனை தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் ஏறக்குறைய 40 நாட்களாக வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், குறு, சிறு நிறுவனங்கள் முடங்கியுள்ளன. மக்கள் வேலையின்றி வறுமையிலும் வீட்டை விட்டு வெளியே செல்லமுடியாமலும் இருக்கின்றனர்.

லாக்டவுனுக்குப் பின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த வாரம் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுடன் ராகுல் காந்தி ஆலோசனை செய்தார்.

இந்நிலையில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநரும் இந்தியருமான அபிஜித் பானர்ஜியுடன் காணொலி மூலம் ராகுல் காந்தி இன்று பொருளாதார நிலவரம், நாட்டின் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும் வழிகள், திட்டங்கள் குறித்து கலந்து ஆலோசித்தார்.

அப்போது பொருளாதார வல்லுநர் அபிஜித் பானர்ஜி கூறியதாவது:

''லாக்டவுனுக்குப் பின் இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என இந்திய அரசு நினைத்தால் மக்கள் கைகளில் அரசு நேரடியாக வழங்க வேண்டும். அவர்கள் செலவழித்தால்தான் பொருளாதாரம் சுழலும். பொருளாதாரத்தை மேம்படுத்த மக்கள் செலவழிக்கச் செய்வதுதான் சிறந்த வழியாகும்.

கரோனாவில் இருந்து தங்கள் நாட்டுப் பொருளாாரத்தை மீட்டெடுக்க அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் தங்கள் மொத்த ஜிடிபியில் 10 சதவீதத்துக்கும் அதிகமாக செலவு செய்கிறார்கள். மக்களுக்கும், நிறுவனங்களுக்கும், தொழில்களுக்கும் மிகப்பெரிய அளவில் சலுகைளையும், திட்டங்களையும் அறிவிக்கிறார்கள்.

ஆனால், இந்தியாவில் மோடி அரசு பொருளாதார ஊக்கத்தொகுப்பு குறித்து உண்மையில் முடிவு செய்யக்கூட இல்லை. இன்னும் ஒரு சதவீதம் ஜிடிபி பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் மக்களுக்காக 10 சதவீதம் ஜிடிபியை செலவு செய்யத் தயாராகிறார்கள்.

கடன் தவணைகளை இப்போது யாரும் செலுத்த வேண்டாம் என்று மத்திய அரசு அரறிவித்துள்ளது புத்திசாலித்தனமாக இருக்கிறது. ஆனால் இதைவிட இன்னும் அதிகமாகச் செய்திருக்கலாம். அதாவது ஒரு காலாண்டுக்கான கடன் தொகை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது என அறிவித்து, அந்தக் கடன் தொகையை அரசு செலுத்தி இருக்கலாம்”.

இவ்வாறு அபிஜித் பானர்ஜி தெரிவித்தார்.

அப்போது ராகுல் காந்தி இடைமறித்து, மக்களிடம் பணத்தை அளிக்க வேண்டும் என்றால் காங்கிரஸின் நியாய் திட்டம் அதாவது பணத்தை மக்களுக்கு நேரடியாக அளிப்பது சரியாக இருக்குமா எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அபிஜித் பானர்ஜி கூறுகையில், “பணத்தை நேரடியாக வழங்குவதில் ஏழைகளோடு மட்டும் நிறுத்திவிடக்கூடாது. மக்கள் தொகையில் 60 சதவீதம் பேருக்குப் பணத்தை வழங்க வேண்டும். மக்களிடம் பணத்தைக் கொடுங்கள். ஏதும் கெட்ட விஷயங்களும் நடந்துவிடாது என்பது எனது கருத்து. பணத்தை மக்களிடம் கொடுத்தால் மக்களில் பெரும்பாலானோர் செலவழிப்பார்கள், சிலர் செலவிடமாட்டார்கள். ஆனால் செலவு செய்வதன் மூலம் பொருளாதார வளர்ச்சி தூண்டப்பட்டு வளர்ச்சி அடையும்.

மக்கள் கைகளில் 6 மாதங்கள் மட்டும் பயன்படக்கூடிய தற்காலிக ரேஷன் கார்டுகளை மத்திய அரசு வழங்க வேண்டும். அப்போதுதான் மக்கள் உணவுப் பற்றாக்குறையின்றி, ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியும். லாக்டவுன் முடிந்தபின் பல நிறுவனங்கள் திவால் நிலைக்குச் செல்லக்கூடும். அந்த நிறுவனங்களைக் காக்க ஒரே வழி கடனைத் தள்ளுபடி செய்துவிடுங்கள்.

மக்கள் கைகளில் பணம் இல்லாததால் நுகர்வும், தேவையும் குறைந்திருக்கும் இந்த நேரத்தில் பணத்தை மக்களிடம் கொடுத்துச் செலவிட வைத்தால் மக்கள் செலவிட்டுப் பொருட்கள வாங்குவார்கள். அதன் மூலம் தேவை அதிகரித்து , பொருட்களின் உற்பத்தி உருவாகி பொருளாதார வளர்ச்சி தூண்டப்படும்'' என்று அபிஜித் பானர்ஜி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in