Last Updated : 05 May, 2020 10:31 AM

 

Published : 05 May 2020 10:31 AM
Last Updated : 05 May 2020 10:31 AM

ஆந்திராவில் 40 நாட்களுக்குப் பின் மதுக்கடைகள் திறப்பு: ஒரேநாளில் ரூ.40 கோடிக்கு விற்பனை

ஆர்வத்துடன் மதுவாங்கிச் சென்ற ஒருவரைக் காணலாம்

அமராவதி

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட லாக்டவுன் காரணமாக ஆந்திர மாநிலத்தில் 40 நாட்களுக்குப் பின் மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. ஒரே நாளில் ரூ.40 கோடிக்கு மதுவகைகள் விற்பனையாகின.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் லாக்டவுன் கொண்டுவரப்பட்டது. முதல் இரு கட்ட லாக்டவுன் 3-ம் தேதியுடன் முடிந்துவிட்டது. 3-வது கட்ட லாக்டவுனில் சில கட்டுப்பாடுகள் தளர்வுடன் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதைப் பின்பற்றி பல்வேறு மாநிலங்களும் லாக்டவுன் தளர்வை கரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் அமல்படுத்தி, மக்கள் நடமாட்டத்துக்கு அனுமதித்துள்ளனன. ஆந்திரப் பிரதேச அரசு சிவப்பு மண்டலங்கள் தவிர்த்து பச்சை, ஆரஞ்சு மண்டலங்களில் மதுக்கடைகளை நேற்று திறந்தன. ஆந்திர அரசு சார்பில் 3,468 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இதில் 2,345 மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இதனால் மதுப்பிரியர்கள் சமூக விலகலைக் காற்றில் பறக்கவிட்டு இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் நின்றனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் குவிக்கப்பபட்டிருந்தும் மக்கள் கட்டுக்குள் வரவில்லை.

வழக்கமாக மதுவகைகளின் விலையைக் காட்டிலும் கூடுதலாக 25 சதவீதம் விலையை உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டது. இருப்பினும் மதுப்பிரியர்கள் மதுவகைகளை வாங்கிச் செல்வதில் தொடர்ந்து ஆர்வம் காட்டினர்.

குறிப்பாக குர்ணூல், குண்டூர், கிருஷ்ணா போன்ற கரோனா வைரஸ் ஹாட் ஸ்பாட் மாவட்டங்களிலும் ஏராளமான மதுக்கடைகள் திறந்திருந்தன, நூற்றுக்கணக்கான மக்கள் எந்தவிதமான சமூக விலகலையும் கடைப்பிடிக்காமல் நின்று மதுவாங்கிச் சென்றனர். நெல்லூர் மாவட்டத்தில் மதுவாங்க வரிசையில் நின்றிருந்த ஒருவர் வெயில் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்.

மதுவகைகள் விலையை அரசு உயர்த்தியதால் அதைப் பதிவேற்றம் செய்ய காலதாமதம் ஆனதால் தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் மதுக்கடைகள் பிற்பகலில்தான் திறக்கப்பட்டன.

சித்தூர், கிழக்கு கோதாவரி, கிருஷ்ணா போன்ற எல்லையோர மாவட்டங்களில் தமிழகம், தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் வந்து வரிசையில் நின்று மதுவாங்கி்ச் சென்றனர். பல இடங்களில் கட்டுக்கடங்காமல் கூட்டம் வந்ததால், மதுவிற்பனை நிறுத்தப்பட்டு கடைகள் அடைக்கப்பட்டன.

ஆந்திர மாநில கலால் வரித்துறை சார்பில் அதிகாரிகள் கூறுகையில், “ பெரும்பாலான இடங்களில் தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக 1 மணிக்கு மேல்தான் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. விலையும் 25 சதவீதம் உயர்த்தப்பட்டிருந்தது. ஒரே நாளில் ரூ.40 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது. இன்று விற்பனை மேலும் அதிகரிக்கும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x