

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஏழை மக்கள் உணவு கிடைக்காமல் தவிக்கிறார்கள். உடனடியாக நாடு முழுவதும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த உத்தரவிடுங்கள் என்று உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஜெய்ராம் ரமேஷ் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
''கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கொண்டுவரப்பட்டுள்ள லாக்டவுனால் பல்வேறு மாநிலங்களில் ஏழை மக்களுக்கு உணவு கிடைக்காமல் பட்டினியால் வாடும் சூழல் இருக்கிறது.
ரேஷன் கார்டு வைத்திருக்கும் பொதுமக்கள் மட்டும்தான் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியும் என்ற கட்டுப்பாடுகளை கரோனா பிரச்சினை முடியும் வரை தளர்த்த வேண்டும். அப்போதுதான் மக்கள் உணவுப் பற்றாக்குறையின்றி பட்டினியால் வாடுவதையும், உயிரிழப்பையும் தடுக்க முடியும்.
லாக்டவுன் காலகட்டத்தில் ஏழை மக்களுக்குப் போதுமான உணவு கிடைக்காமல் பலர் பட்டினியில் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் பெரும்பாலானோர் தினக்கூலிகளும், விளிம்பு நிலை மக்களும்தான்.
லாக்டவுன் கொண்டுவரப்பட்டதிலிருந்து பல்வேறு குடும்பங்கள், குறிப்பாக விளிம்பு நிலையில் இருக்கும் மக்கள், ஏழைகள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்துக்குள் வராமல் இருப்பதால் அவர்களால் ரேஷனில் உணவு தானியங்களைப் பெற முடியவில்லை.
இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, ஏழைகளும், விளிம்புநிலை மக்களும் பட்டினியால் வாடுவதைத் தடுக்கும் நோக்கில், நாடு முழுவதும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும் குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமின்றி அட்டை இல்லாதவர்களுக்கும் தேவையான அளவு உணவு தானியங்களை வழங்க அரசுக்கும், அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். ஆதார் அடிப்படையில் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதிலிருந்து அளித்து அனைவருக்கும் தானியங்களை வழங்கிட வேண்டும்.
மேலும், அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைக்காரர்கள், உணவுப்பொருட்கள், பழங்கள் விற்கும் சிறு கடைவியாபாரிகளை போலீஸார் தொந்தரவு செய்வதைத் தடுக்க உத்தரவிட வேண்டும்.
கரோனா வைரஸை முழுமையாகத் தடுக்க நீண்டகாலமாகும். ஆனால், அதுவரை வேலை கிடைக்காமல் வருமானமில்லாமல், உணவின்றி பல ஏழைகள் பட்டினியால் உயிரிழப்பதைத் தடுக்க உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம்''.
இவ்வாறு அந்த மனுவில் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இந்தப் பொதுநல மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.