எத்தனை நாள் லாக்டவுனில் வாழப்போகிறீர்கள்; மதுவுக்கு 70 சதவீதம் கூடுதல் வரி: அரவிந்த் கேஜ்ரிவால் அதிரடி

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் : கோப்புப்படம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் : கோப்புப்படம்
Updated on
2 min read

விதிமுறைகளைப் பின்பற்றாமல், சமூக விலகலை மதிக்காமல் நடந்தால் தளர்வுகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுவிடுவோம். லாக்டவுனில் எத்தனை நாட்களுக்கு வாழ முடியும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மக்களை எச்சரித்துள்ளார்.

மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்ட முதல் நாளே மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்று போலீஸார் தடியடிநடத்தும் அளவுக்குச் சென்றது. இதனால் மதுவகைகளுக்கு 70 சதவீதம் கூடுதல் வரி விதித்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு நள்ளிரவில் உத்தரவிட்டது. இது இன்று முதல் அமலுக்கு வருகிறது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் லாக்டவுன் கொண்டுவரப்ட்டது. முதல் இரு கட்ட லாக்டவுன் நேற்றுடன் முடிந்துவிட்டது. 3-வது கட்ட லாக்டவுனில் சில கட்டுப்பாடுகள் தளர்வுடன் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதைப் பின்பற்றி பல்வேறு மாநிலங்களும் லாக்டவுன் தளர்வை கரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் அமல்படுத்தி, மக்கள் நடமாட்டத்துக்கு அனுமதித்துள்ளனன. டெல்லியில் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நேற்று முதல் பல்வேறு இடங்களில் தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டத்துக்கு அனுமதிக்கப்பட்டது. 40 நாட்களுக்குப் பின் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் திறக்கப்பட்டு ஊழியர்கள் பணிக்குச் சென்றனர்

கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மட்டும் மக்கள் நடமாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டு, மற்ற இடங்களில் கட்டுப்பாடுகளுடன் மக்கள் வெளியே வரவும், கடைகளைத் திறக்கவும் டெல்லி அரசு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது.

மேலும், டெல்லியில் 150 இடங்களில் மதுக்கடைகளைத் திறக்கவும் டெல்லி அரசு அனுமதித்திருந்தது. ஆனால் ஒவ்வொரு மதுக்கடை முன்பும் மதுப்பிரியர்கள் 2 கி.மீ. நீளத்துக்கு வரிசையில் நின்று மதுவாங்கக் காத்திருந்தனர். சமூக விலகலைக் கடைப்பிடித்து கடைகளில் நிற்க வேண்டும் என டெல்லி அரசு கூறியும் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டன. இதனால் மதுக்கடைகளைத் திறந்த சில மணிநேரத்தில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் மதுக்கடைகள் மூடப்பட்டன.

பல கடைகளில் கூட்டம் கட்டுக்கடங்காமல் செல்லவே போலீஸார் தடியடி நடத்திக் கூட்டத்தினரைக் கலைத்தனர். இதனால் மதுக்கடைகளுக்கு வரும் மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் இருப்பது டெல்லி அரசுக்குப் பெரும் கவலையை அளித்தது.

இதையடுத்து, மாலை முதல்வர் கேஜ்ரிவால், அமைச்சர்கள் சத்யேந்திர ஜெயின், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் அவசர ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் முடிவில் மது வகைகளுக்கு சிறப்பு கரோனா கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி அனைத்து மதுவகைகளின் விலையையும் 70 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டு அதற்கான அரசாணை நள்ளிரவு வெளியிடப்பட்டது.

முன்னதாக டெல்லியில் மதுக்கடைகள் முன் மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் நிற்பது குறித்த காட்சியால் முதல்வர் கேஜ்ரிவால் மிகுந்த அதிருப்தி அடைந்தார். அதுகுறித்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் காணொலி மூலம் மக்களுக்கு உரையாற்றினார்.

அதில் அவர் கூறியதாவது:

''டெல்லியில் 40 நாட்களுக்குப் பின் பல்வேறு தளர்வுகளுடன் மக்கள் நடமாட்டத்துக்கு அனுமதித்துள்ளோம். ஆனால், மக்கள் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில்லை. சமூக விலகலைக் கடைப்பிடியுங்கள். 6 அடி இடைவெளியில் கடைகளில் நில்லுங்கள் என்று கூறியும் கடைப்பிடிக்கவில்லை. தயவுசெய்து இடர்களை, துன்பங்களைச் சந்திக்கும் வேலையில் இறங்காதீர்.

மத்திய அரசு அனுமதித்த நிலையில் டெல்லியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால், டெல்லியில் இன்று நடந்த அனைத்தும் சரியில்லை. சமூக விலகை எங்கெல்லாம் கடைப்பிடிக்காமல் மக்கள் செயல்படுகிறார்களோ அங்கு தளர்வுகள் திரும்பப் பெறப்படும் என எச்சரிக்கிறேன்.

நான் கேட்கிறேன். எத்தனை நாட்களுக்கு நம்மால் லாக்டவுனுக்குள் வாழ முடியும். எப்போதுமே லாக்டவுனுக்குள் வாழ முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நமது வழக்கமான இயல்வு வாழ்க்கையை நாம் மெல்லத் தொடங்க வேண்டும்.

மதுக்கடைகள் முன் மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்காவிட்டால் அந்த மதுக்கடைகள் மூடி சீல் வைக்கப்படும். கரோனா வைரஸை நாம் தோற்கடிக்க வேண்டும். முகக்கவசம் அணியுங்கள், சமூக விலகலைக் கடைப்பிடியுங்கள், கைகளில் சானிடைசரைப் பயன்படுத்துங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்''.

இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in