

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் வரும் 7-ம் தேதி முதல் அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கடந்த 40 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால், வேலை மற்றும் கல்வி நிமித்தமாக வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் வரும் 7-ம் தேதி முதல் அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது.
வைரஸ் அறிகுறி இல்லாதவர்கள்..
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்கள் கடற்படை கப்பல் மற்றும் விமானங்கள் மூலம் கட்டண அடிப்படையில் அழைத்து வரப்படுவார்கள். குறிப்பாக, கரோனா வைரஸ்பாதிப்பு அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே அழைத்து வரப்படுவார்கள். நாடு திரும்பும் அனைவரும் ஆரோக்கிய சேது செல்போன் செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
முதல் கட்டமாக 19 லட்சம் பேர் அழைத்து வரப்படவுள்ளனர். முதலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியுள்ள இந்தியர்கள் அழைத்து வரப்படுவர். அங்கு சுமார் 34 லட்சம் இந்தியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து சவுதி அரேபியா, குவைத்தில் உள்ள இந்தியர்கள் அழைத்து வரப்படுவர்” என்றார்.
1990-களில் வளைகுடா போர்நடந்தபோது குவைத்தில் தங்கியிருந்த சுமார் 1.7 லட்சம் இந்தியர்கள் அங்கிருந்து விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.- பிடிஐ