

நிலம் கையகப்படுத்துதல் திருத்த மசோதா விஷயத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிந்துரையை ஏற்க தயார் என மத்திய அரசு நேற்று அறிவித்தது.
இது தொடர்பாக மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரேந்திர சிங் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியது: நிலம் கையகப்படுத்துதல் மசோதா தொடர்பான விஷயத்தில் அரசியல் தலைவர்கள், கட்சிகள், விவசாயிகள், நிறுவனங்கள் என யார் நல்ல பரிந்துரைகளை அளித்தாலும் அதனை பரிசீலிக்க அரசுக்கு எவ்வித தயக்கமும் இல்லை என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தோம். இப்போது நிலம் கையகப்படுத்துதல் மசோதா தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு சில பரிந்துரைகளை அளித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டுக் குழு என்பதே ஒரு சிறிய நாடாளுமன்றம்தான். எனவே அவர்கள் அளித்துள்ள பரிந்துரைகளை ஏற்க அரசு தயாராக உள்ளது. இதில் அரசின் நிலைப்பாடு என்ன என்பது ஆகஸ்ட் 7-ம் தேதி உறுதியாக தெரிவிக்கப்படும் என்றார்.
முன்னதாக நிலம் கையகப்படுத்துதல் மசோதாவில் பாஜக பல முக்கிய திருத்தங்களை கொண்டு வந்தது. இவை விவசாயிகளுக்கு எதிரானவை என்று கருதப்பட்டதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் விவசாயிகளை திரட்டி போராட்டங்களை நடத்தின.
நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் அவசர சட்டம் மூலம் இந்த திருத்த மசோதாவை அரசு அமல்படுத்தியது.
இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அந்தக் குழுவின் பரிசீலனையில் மத்திய அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய 6 திருத்தங்களை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக நிலம் கையகப்படுத்த விவசாயிகள் ஒப்புதல் தேவை என்ற பிரிவு, நிலம் கையகப்படுத்துவதால் ஏற்படும் சமூகத் தாக்க மதிப்பீடு ஆகியவை மீண்டும் மசோதாவில் இடம்பெறுகின்றன.
நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் 11 பாஜக உறுப்பினர்களும் இதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர். பாஜக தங்களது சர்ச்சைக்குரிய நிலம் கையகப்படுத்த மசோதா திருத்தங்களை கைவிடுவதைத் தொடர்ந்து அலுவாலியா தலைமை நாடாளுமன்றக் கூட்டுக்குழு ஆகஸ்ட் 7-ம் தேதி அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.