

மைக்ரோ நிதித் துறையைச் சேர்ந்த 88 கடன் வழங்குநர்கள் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கான தயாரிப்புகளை மேற்கொண்டு வருவதாக மைக்ரோஃபைனான்ஸ் இன்ஸ்டிடியூஷன் நெட்வொர்க் (எம்.எஃப்.ஐ.என்) திங்களன்று தெரிவித்துள்ளது.
மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனம் என்பது குறைந்த வருமானம் உடையவர்களுக்கு நிதி சேவைகளை வழங்கும் ஒரு அமைப்பாகும். சிறு, குறு, நடுத்தர தொழில்கள் தொடங்க இந்நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டுகின்றன. இதில் காப்பீடு, வைப்புத்தொகை மற்றும் பிற சேவைகளும் வழங்கப்படுகிறது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கினால் நாட்டில் சிறு, குறு, நடுத்தர தொழில்களில் ஈடுபட்டுவந்தவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிராம, நகர்ப்புற மக்களோடு இணைந்துசெயல்படும் வகையில் மீண்டும் மைக்ரோ நிதி நிறுவனங்கள் செயல்பட உள்ளதாக மைக்ரோஃபைனான்ஸ் இன்ஸ்டிடியூஷன் நெட்வொர்க் தெரிவித்துள்ளது. ஆனால் எப்பொழுது தொடங்கப்படும் என தெரிவிக்கவில்லை.
இதுகுறிதது மைக்ரோஃபைனான்ஸ் இன்ஸ்டிடியூஷன் நெட்வொர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மைக்ரோ நிதித் துறையைச் சேர்ந்த 88 கடன் வழங்குநர்கள் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கான தயாரிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். கோவிட் 19 தொடர்பான அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடன் வழங்குநர்கள் கடைப்பிடிப்பார்கள்.
கடன் வாங்குபவர்களுக்கு டெர்ம் லோன் எனப்படும் காலாண்டு உள்ளிட்ட கால கடன்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கி வழங்கிய மூன்று மாத கால அவகாசத்தை நீட்டிக்க கடன் வழங்குநர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர், மேலும், அதில் இருந்து விலகிய வாடிக்கையாளர்களிடமிருந்து மட்டுமே வசூல் செய்யப்படும்.
ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னர் மைக்ரோ நிதி நிறுவனங்கள் முழு அளவிலான செயல்பாடுகளை ஆரம்பிக்கும். ஏனெனில் அப்போதுதான் மைக்ரோ ஃபைனான்ஸிற்கான தேவை அதிகரிக்கும்.
இவ்வாறு மைக்ரோஃபைனான்ஸ் இன்ஸ்டிடியூஷன் நெட்வொர்க் தெரிவித்துள்ளது.