

மேற்கு வங்கத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யச் சென்ற மத்தியக் குழுவினருடன் சென்ற எல்லைப் பாதுகாப்புப் படை வீரருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பிஎஸ்எப் படையில் உள்ள 50க்கும் மேற்பட்டோரையும், மத்தியக் குழுவினரையும் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
கடந்த மாதம் 25-ம் தேதி மத்திய அமைச்சகங்களுக்கான குழுவினர் மேற்கு வங்கத்துக்குச் சென்றிருந்தனர். கொல்கத்தா, 24 பர்கானா, உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கரோனா தடுப்புப் பணிகள், பரிசோதனைகள், லாக்டவுன் கட்டுப்பாடு ஆகியவை குறித்து ஆய்வு நடத்தினர்.
கரோனாவில் பாதிக்கப்பட்ட பிஎஸ்எப் வீரர் காவலர் அந்தஸ்தில் இருப்பவர், பிஎஸ்எப் பிரிவில் ஓட்டுநராக இருக்கிறார். மேற்கு வங்கம் வந்திருந்த மத்தியக் குழுவினர் கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்குப் பயணம் செய்தபோது அவர்கள் பயணித்த வாகனத்தை அவர்தான் இயக்கியிருந்தார்.
இந்நிலையில் அந்த பிஎஸ்எப் வீரருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. நேற்று பரிசோதனை முடிவு வெளியானதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து உடனடியாக அந்த பிஎஸ்எப் வீரர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் மேற்கு வங்கம் வந்திருந்த மத்தியக் குழுவினர் கொல்கத்தாவில் உள்ள பிஎஸ்எப் விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்தார்கள். அங்கு அவர்களுக்கு வாகன வசதி, உணவு, பாதுகாப்பு அனைத்தும் பிஎஸ்எப் சார்பில் வழங்கப்பட்டிருந்தது.
கரோனாவில் பாதிக்கப்பட்ட அந்த பிஎஸ்எப் வீரர் 50க்கும் மேற்பட்ட வீரர்களுடன் தொடர்பில் இருந்ததால், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்துதலில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மத்தியக் குழுவுக்கும் மேற்கு வங்க அதிகாரிகள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 50 பேரில் 20 பேருக்குப் பரிசோதனை நடந்துள்ள நிலையில் முடிவுகள் அறிவிக்கப்படவி்ல்லை.