

குஜராத் மாநிலத்தின் சூரத்தில் சொந்த ஊர்களுக்குத் திரும்ப விரும்பும் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் போலீஸாரிடையே மோதல் ஏற்பட்டது, கண்ணீர்ப் புகைக் குண்டு வீசியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸார் மீது தொழிலாளர்கள் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் இதனையடுத்து தடியடி, கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு ஆகிய நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளது.
இந்தியாவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. சூரத்தில் மட்டும் இதுவரை 30 பேர் பலியாகியுள்ளனர்.
ஞாயிறன்று மட்டும் 374 கரோனா புதிய தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது, ஒரே நாளில் 28 பேர் பலியாகியுள்ளனர். இதில் அகமதாபாத்தில் மட்டும் 23 பேர் பலியாகியுள்ளனர்.
இதன் மூலம் குஜராத்தில் பாதிப்பு எண்ணிக்கை 5,248 ஆகவும், பலி எண்ணிக்கை 290 ஆகவும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் 4வது முறையாக புலம்பெயர் தொழிலாளர்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தியுள்ளனர். கரோனா வைரஸ் அச்சுறுத்தலிலும் தங்களை வேலை செய்ய வைப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.