Published : 04 May 2020 01:38 PM
Last Updated : 04 May 2020 01:38 PM

பிரதமர் கேர்ஸ் நிதியிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கான டிக்கெட் கட்டணம் செலுத்தக்கூடாதா?- சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம்

பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி : கோப்புப்படம்

புதுடெல்லி

புலம்பெயர் தொழிலாளர்கள் செல்லும் சிறப்பு ரயிலில் டிக்கெட் கட்டணத்தை ரயில்வே ஏற்க மறுத்தால், பிரதமர் கரோனா நிதியிலிருந்து (பிஎம் கேர்ஸ்) செலுத்தலாமே என்று பாஜக மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல ரயிலில் செல்லும்போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்தக் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களின் போக்குவரத்துக் கட்டண்ததை காங்கிரஸ் கட்சி செலுத்தும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

மேலும், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் ரயில்வே துறையைச் சாடியிருந்தார். பிரதமரின் கரோனா நிதிக்கு ரூ.151 கோடி கொடுக்க முடியும் உங்களால் ஏழை புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து டிக்கெட் வசூலிக்காமல் இருக்க முடியாதா என ரயில்வே துறையைச் சாடியிருந்தார்.

பாஜகவின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமியும் ரயில்வே துறையின் செயலையும், மத்திய அரசையும் விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் முதலில் பதிவிட்டார். அதன்பின் ரயில்வே அமைச்சரிடம் பேசி தெளிவு பெற்றதை 2-வது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமி முதலில் பதிவிட்ட ட்வீட்டில் குறிப்பிடுகையில், “அரை வயிற்றுப் பட்டினியோடு இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து ரயில் கட்டணத்தை மத்திய அரசு வசூலிப்பது எவ்வளவு முட்டாள்தனம். வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் இலவசமாக மத்திய அரசு அழைத்து வருகிறது. ரயில்வே துறை கட்டணத்தை ஏற்க மறுத்துவிட்டால், பிரதமர் கேர்ஸ் நிதியிலிருந்து ஏன் செலுத்தக்கூடாது” எனத் தெரிவித்தார்.

அதன்பின் சிறிதுநேரத்துக்குப் பின் பதிவிட்ட மற்றொரு ட்வீட்டில் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிடுகையில், “அமைச்சர் பியூஷ் கோயலிடம் பேசினேன். புலம்பெயர் தொழிலாளர்கள் செல்லும் ரயில் கட்டணத்தில் 85 சதவீதக் கட்டணத்தை ரயில்வே துறையே செலுத்தும். 15 சதவீதத்தை மாநில அரசுகள் செலுத்தலாம். புலம்பெயர் தொழிலாளர்கள் கட்டணமின்றிப் பயணிக்கலாம். விரைவில் அதிகாரபூர்வ அறிக்கையை ரயில்வே வெளியிடும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x