Published : 04 May 2020 10:43 AM
Last Updated : 04 May 2020 10:43 AM

குரல் மூலம் கரோனாவைக் கண்டுபிடிக்கப் புதிய கருவி!

நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. கரோனாவைக் கட்டுப்படுத்த பரிசோதனைகள் அதிகம் செய்யப்படுவது அவசியம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால், அதிக மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில் பெரிய அளவில் பரிசோதனைகள் நடத்தப் போதுமான பரிசோதனைக் கருவிகள் இல்லை. இந்நிலையில் குரல், சுவாசம் ஆகியவற்றைக் கொண்டு கரோனோ தொற்றை முன்பரிசோதனை அடிப்படையில் கண்டுபிடிக்கும் புதிய முறையை பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

ஏற்கெனவே நாட்டின் பரிசோதனைகளை அதிகரிக்க சீனாவில் இருந்து ரேபிட் பரிசோதனைக் கருவிகள் தருவிக்கப்பட்டன. ஆனால், அதன் செயல்பாடுகள் பாதகமாக இருந்ததால் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அதற்குத் தடைவிதித்தது. இந்த ரேபிட் பரிசோதனைக் கருவியும் ஒரு முன்பரிசோதனைக் கருவிதான். கரோனா உறுதிசெய்ய பிசிஆர் பரிசோதனை அவசியம். ஆனால், எல்லோருக்கும் பிசிஆர் பரிசோதனை சாத்தியமில்லாததால் ரேபிட் பரிசோதனைக் கருவி மாதிரியான முன்பரிசோதனைக் கருவிகளின் தேவை அவசியமானதாக இருக்கிறது. இதன் மூலம் தேவை இல்லாதவர்களுக்கு பிசிஆர் சோதனை செய்வதைத் தவிர்க்க முடியும். முன்பரிசோதனையில் தொற்று உறுதியானவர்களுக்கு மட்டும் அடுத்தகட்ட பிசிஆர் பரிசோதனை செய்யலாம். இதன் மூலம் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடியும். அதுபோன்ற ஒரு முன்பரிசோதனைக் கருவியைத்தான் பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

'இந்து தமிழ் திசை'யிடம் பேசிய பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவன இணைப் பேராசிரியர் ஸ்ரீராம் கணபதி, “காஸ்வாரா (Coswara) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கருவியை இணையம் மூலம் பயன்படுத்த முடியும். ஸ்மார்ட்போன்கள் மூலமும் பயன்படுத்த முடியும். https://coswara.iisc.ac.in/ என்ற இணையதள முகவரியில் சில அடிப்படைத் தகவல்களைப் பகிர்ந்து பின் நமது குரலைப் பதிவுசெய்ய வேண்டும். அதன் மூலம் கரோனா தொற்றை முன்பரிசோதனை அடிப்படையில் கண்டுபிடிக்க முடியும். இதில் காசநோய், ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்கெனவே இருக்கும் பட்சத்தில் அதையும் இந்தக் கருவி கணக்கில் எடுத்துக்கொண்டே செயல்படும்” என்றார்.

”இப்போது நாங்கள் ஆராய்ச்சிக்குத் தேவையான குரல் மாதிரிகளைச் சேகரித்துவருகிறோம். போதுமான குரல் மாதிரிகள் கிடைத்தால் கணினி வழிமுறையில் வைரஸ் தொற்று குரல்களைக் கண்டுபிடிக்க முடியும். அதனால் எங்கள் இணையதளம் மூலம் மக்கள் குரல் மாதிரிகளை முன்வந்து தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இதற்குத் தனிப்பட்ட தகவல்களை நீங்கள் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தச் சோதனைக்கு 5 நிமிடங்கள்தாம் ஆகும். இந்தச் சோதனை வெற்றி ஆகும் பட்சத்தில். குறைந்த விலையில் கரோனா முன்சோதனைக்கான ஒரு சிறந்த மாற்றாக இருக்கும். இந்தக் கருவி லாப நோக்கற்ற கண்டுபிடிப்பாகும்” என மேலும் ஸ்ரீராம் குறிப்பிட்டார்.

இந்தக் கருவி இருமல், சுவாசம், பேச்சு ஆகிய மூன்றையும் பதிவுசெய்து அதன் அடிப்படையில் ஏதேனும் கரோனா தொற்று அறிகுறி தென்பட்டால் சுட்டுக் காண்பிக்கும். வறட்டு இருமலும் சுவாசப் பிரச்சினையும்தான் கரோனாவின் மிக முக்கியமான அறிகுறிகளாக இருக்கின்றன. அதனால் தனிமைப்படுத்தலில் இருப்பவர்களை இந்தக் கருவி மூலம் பரிசோதித்து, ஏதெனும் அறிகுறி தென்படும்பட்சத்தில் அடுத்தகட்டப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல முடியும்.

இந்தக் கருவி இன்னும் ஓரிரு மாதங்களில் முழுமை அடையும். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் அனுமதி பெற்ற பிறகு இந்தக் கருவியைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர இருப்பதாகவும் ஸ்ரீராம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீராம் கணபதி உள்ளிட்ட பிரந்த குமார் கோஷ், ஆனந்த் மோகன், அனூரூப் அய்யங்கார், நீரஜ் ஷர்மா, பிரஷாந்த் கிருஷ்ணன், நிர்மலா, ரக்‌ஷித் பட், ஷாபஸ் சுல்தான், ஸ்ரேயாஸ் ராம்ஜி, ஸ்ரீகாந்த் ராஜ் ஆகிய 11 பேர் அடங்கிய குழுவினர் இந்தக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x