வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை இலவசமாக அழைத்துவரும் அரசு புலம்பெயர் தொழிலாளர்களைக் கவனிக்க மறுப்பது ஏன்? ரயில் கட்டணத்தை காங்கிரஸ் செலுத்தும்: சோனியா காந்தி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி : கோப்புப் படம்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி : கோப்புப் படம்.
Updated on
2 min read

வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை இலவசமாக அழைத்துவரும் மத்திய அரசு, உள்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களையும் கட்டணமின்றி சொந்த மாநிலத்துக்கு ஏன் ரயிலில் அனுப்ப முடியாது? புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை காங்கிரஸ் கட்சியே ஏற்கும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் லாக்டவுனை கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது. பொதுமுடக்கத்தால் தொழிற்சாலை, நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டதால் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையின்றி, வாழ்வாதாரமின்றித் தவித்தனர். ரயில், பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டால், சொந்த மாநிலத்துக்கு நடந்தே செல்லத் தொடங்கினர். ஆனால், அவர்கள் பல்வேறு மாநிலங்களில் தடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஒருமாதத்துக்குப் பின் தற்போது சிறப்பு ரயில்கள் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், அவர்கள் கையில் பணம் இல்லாத சூழலிலும் ரயில்வே டிக்கெட் வசூலிக்கிறது. சில மாநிலங்கள் டிக்கெட் செலவை ஏற்றுள்ளன.

இதுகுறித்து காங்கிகரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று வெளியிட்ட அறிக்கையில் புலம்பெயர் தொழிலாளர்களிடம் டிக்கெட் கட்டணம் பெறும் ரயில்வே துறையையும், அவர்கள் மீது அக்கறையின்றி இருக்கும் மத்திய அரசையும் சாடியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

''நம் தேசத்தின் வளர்ச்சித் தூதர்களாக நமது தொழிலாளர்களும், புலம்பெயர் தொழிலாளர்களும்தான் இருக்கிறார்கள். நம்முடைய மத்திய அரசு தனது பொறுப்பை உணர்ந்து வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை இலவசமாக அழைத்து வருகிறது. குஜராத்தில் நடக்கும் ஒரு நிகழ்ச்சிக்காக போக்குவரத்து, உணவு, மக்களை அழைத்துவருதல் போன்றவற்றுக்காக ரூ.100 கோடி செலவு செய்கிறது. பிரதமர் கரோனா நிதிக்கு ரயில்வே ரூ.151 கோடி நிதி வழங்குகிறது.

ஆனால், நாட்டின் வளர்ச்சிக்குத் துணையாக இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது அக்கறை வைத்து இக்கட்டான இந்தச் சூழலில் அவர்களின் சொந்த மாநிலத்துக்கு இலவசமாக ரயிலில் அனுப்பி வைக்கக்கூடாதா?

லாக்டவுனுக்குத் தயராக வெறும் 4 மணிநேரம் மட்டுமே அவகாசம் அளித்த மத்திய அரசு, புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்குச் செல்ல போதுமான வாய்ப்பை வழங்க மறுத்துவிட்டது. கடந்த 1947-ம் ஆண்டு இந்தியப் பிரிவினைக்குப் பின் மிகப்பெரிய அளவில் புலம்பெயர் மக்கள், தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு உணவின்றி, மருந்தின்றி, கையில் பணமில்லாமல், போக்குவரத்து வசதியில்லாமல், தங்கள் குடும்பத்தினருடன், அன்புக்குரியவர்களுடன் சேர வேண்டும் நோக்கில் செல்லும் சோகத்தை இந்தியா லாக்டவுனின் போது காண நேர்ந்தது.

லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள், மக்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்படும் சூழலில் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஆனால், அவர்களிடம் ரயில் கட்டணத்துக்கும், பஸ் கட்டணத்துக்கும் கையில் பணமில்லை.

இதுபோன்ற இக்கட்டான சூழலில் புலம்பெயர் தொழிலாளர்களிடம் மத்திய அரசும், ரயில்வே துறையும் டிக்கெட் கட்டணம் வசூலிப்பதுதான் வேதனையாக இருக்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் நலனில் மத்திய அரசும், ரயில்வேயும் அக்கறை கொள்ளுங்கள் என்ற காங்கிரஸின் கோரிக்கையை முழுமையாகப் புறக்கணித்துவிட்டார்கள்.

ஆதலால், காங்கிரஸ் கட்சியின் தலைமை எடுத்துள்ள முடிவின்படி மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்குச் செல்வதற்குத் தேவையான போக்குவரத்துக் கட்டணம் அனைத்தையும் ஏற்கும். நம்முடைய தொழிலாளர்களுடன் தோளோடு தோள் சேர்த்து ஒற்றுமையாக நிற்க வேண்டிய தருணம் என்பதால் காங்கிரஸ் கட்சி சிறிய பங்களிப்பை அளிக்கிறது''.

இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in