Published : 04 May 2020 06:57 AM
Last Updated : 04 May 2020 06:57 AM

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீடிப்பதால் காணொலி காட்சி மூலம் விசாரணை தொடரும்: பார் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் உச்ச நீதிமன்றம் உறுதி

காணொலி காட்சி விசாரணை நடை முறை தொடரும் என்று உச்ச நீதிமன்றம் உறுதிபட தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஒரு மாதமாக காணொலிக் காட்சி மூலம் விசா ரணை நடைபெறுகிறது. இதற்காக நீதிபதி களின் வீடுகளுக்கு அதிவேக இணையதள இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கறி ஞர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு காணொலிக் காட்சி மூலம் வாதாடி வருகின்றனர். எனினும், சில நேரங்களில் இணையதள குளறுபடியால் வழக்கு விசாரணையில் தடை ஏற்படுகிறது.

இந்த பின்னணியில் காணொலி காட்சி விசாரணைக்கு இந்திய பார் கவுன்சில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் தலைவர் மன்னன் குமார் மிஸ்ரா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்கு அண்மை யில் அனுப்பிய கடிதத்தில், ‘90 சதவீத வழக்கறிஞர்கள், நீதிபதிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து அதிகம் தெரி யாது. காணொலி காட்சி விசாரணையை ஏற்க முடியாது. இது நடைமுறைக்கு சாத்தியமற்றது' என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் வெளி யிட்ட 38 பக்க அறிக்கை:

காணொலி காட்சி விசாரணை தொடர்பாக வெவ்வேறு விதமான கருத்து கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீடிக்கும் நிலையில் அனைத்து தரப்பினரின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு காணொலி காட்சி விசாரணை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணை நடைமுறை தொடரும். இதன்மூலம் நேரம், பணம் மிச்சப்படுகிறது, அலைச்சல் குறைகிறது. பொதுமக்கள் தரப்பில் செய்தியாளர்கள் விசாரணையை நேரடியாக பார்வையிடுகின்றனர்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 23 நாடுகளில் காணொலிக் காட்சி விசாரணை அமலில் உள்ளது. கரோனா வைரஸ் காரணமாக இந்தியா உட்பட மேலும் பல்வேறு நாடுகளில் இந்த நடைமுறை புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x