காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ராணுவ வீரர் பலி

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: ராணுவ வீரர் பலி
Updated on
1 min read

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை ராணுவம் நேற்று முறியடித்தது. அப்போது 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, “குப்வாரா மாவட்டம், கேரன் செக்டார், ஜுமகுண்ட் நார் என்ற இடத்தில், எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்கள் அவர்களை நோக்கி சுட்டு, விரட்ட முயன்றனர். தீவிரவாதிகள் பதில் தாக்குதல் நடத்தியதால் அங்கு மோதல் ஏற்பட்டது. இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர்” என்றார்.

இந்திய வீரர் பலி

குப்வாரா மாவட்டத்தின் டாங்தார் செக்டார், எல்லை கட்டுப் பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள டயா வனப்பகுதியில் நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இரவு முழுவதும் நீடித்த இந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயம் அடைந்தனர். அங்கு மோதல் தொடர்ந்து நடைபெறுவதாக நேற்று ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.

பாகிஸ்தான் தாக்குதல்

இதனிடையே காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் துருப்புகள் அத்துமீறி தாக்குதல் நடத்தின.

துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும், பீரங்கி குண்டுகளை வீசியும் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி முதல் நேற்று அதிகாலை 4.30 மணி வரை இத்தாக்குதல் நடந்ததாக ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in