

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு, ஜேஇஇ தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது குறித்து மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் அறிவிக்க உள்ளது
2020-21- ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு மே 3-ம் தேதி நடத்தப்பட இருந்தது. ஆனால், கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக நாடுமுழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், உயர் கல்விநிறுவனங்களை மூட மத்தியஅரசு கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி உத்தரவிட்டது.
இதனால் மே 3-ம்(இன்று) தேதி நடக்கும் நீட் தேர்வு, ஜேஇஇ தேர்வுகள் நடக்குமா? என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தேர்வை ஒத்திவைத்து மத்திய மனித வளத்துறை அமைச்சகம் கடந்த மார்ச் 28-ம் தேதி அறிவித்தது.
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் மார்ச் 27-ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் 15 லட்சத்து 93 ஆயிரத்து 452 பேரும், அதில் தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 502 பேரும் விண்ணப்பித்து இருந்தனர்.
கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. 3-வது கட்ட ஊரடங்கு நாளை முதல் வரும் 17-ம் தேதி வரை அமலில் இருக்கும்.
இந்த சூழலில் நீட், ஜேஇஇ தேர்வு குறித்த அறிவிப்பு குறித்து மத்திய மனித வளத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ கரோனா வைரஸ் பரவல் தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட ஊரடங்கினால் நீட்,ஜேஇஇ தேர்வு ஒத்தி வைக்கப்பட்டன. இ்ந்த இரு தேர்வும் எப்போது நடக்கும் என்பது குறித்த புதிய தேதிகளை வரும் 5-ம் தேதி மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிடுவார்.
இத்தனை நாட்கள் ஊசலாட்டத்தில் இருந்த வந்த மாணவர்களுக்கு அன்று நி்ம்மதி அடைவார்கள். அந்த நேரத்தில் மாணவர்களுடனும் அமைச்சர் பொக்ரியால் கலந்துரையாட உள்ளார்”.
என்று தெரிவி்த்துள்ளார்