

கடந்த 6 ஆண்டுகளில் பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் செயல்படா சொத்துகளின் மதிப்பு 6 மடங்கு அதிகமாகவும், இந்தியன் வங்கியின் செயல்படா சொத்துகளின் (என்பிஏ) 4 மடங்காகவும் அதிகரித்துள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனுவில் தெரியவந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரைச் சேர்ந்த சுஜீத் சுவாமி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்தாக்கல் செய்த மனுவில் இந்த விவரங்கள் பெறப்பட்டுள்ளன.
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் கடந்த 2014- மார்ச் மாதம் முடிவில் வாராக் கடன் அளவு ரூ.11 ஆயிரத்து 876 கோடியாக இருந்தது. ஆனால், கடந்த 6 ஆண்டுகளில் 6 மடங்கிற்கு அதிகமாக அதிகரித்து 2019, டிசம்பர் மாதத்தின் கணக்கின்படி ரூ.73 ஆயிரத்து 140 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபேல செயல்படாத வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை 2014, மார்ச் 31-ம்தேதி 2 லட்சத்து 8 ஆயிரத்து 5 ஆக இருந்த நிலையில் 2019, டிசம்பர் மாத முடிவில் 6 லட்சத்து 17ஆயிரத்து 306 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியன் வங்கியின் செயல்படா சொத்துகள் மதிப்பு கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி ரூ.8 ஆயிரத்து 68 கோடியாக இருந்தது. இது 4 மடங்கு அதிகரித்து 2019, டிசம்பர் மாத முடிவில் ரூ.32 ஆயிரத்து 561 கோடியாக அதிகரித்துள்ளது.
செயல்படா கணக்குககளின் எண்ணிக்கையும் 2014, மார்ச் 31-ம் தேதி 2 லட்சத்து 48 ஆயிரத்து 921 ஆக இருந்த நிலையில் 2019, டிசம்பர் மாத இறுதியில் 5 லட்சத்து 64 ஆயிரத்து 816 கணக்குகளாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஆர்டிஐ ஆர்வலர் சுவாமி கூறுகையில், “எஸ்எம்எஸ் எச்சரிக்கை மூலம் சேவைக் கட்டணம், குறைந்தபட்ச இருப்பு, லாக்கர் கட்டணம், டெபிட் கார்டு சேவைக் கட்டணம், உள்ளிட்டபல கட்டணங்களை வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்தது இதில் தெரியவந்தது.
2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ம் தேதி வரை எம்எஸ்எம் அலர்ட் மூலம் பேங்க் ஆஃப் பரோடா ரூ.107.7 கோடி வசூலித்துள்ளது. இந்தியன் வங்கி ரூ.21 கோடி வசூலித்துள்ளது. இரு தேசிய வங்கிகளிலும் இருக்கும் வாராக் கடனை மக்களுக்குத் தெரியப்படுத்தவே இந்த மனுவைத் தாக்கல் செய்தேன். எஸ்பிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்து என்பிஐ விவரங்களைக் கேட்டுள்ளேன். இன்னும் கைக்குக் கிடைக்கவில்லை” எனத் தெரிவித்தார்.