புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட சுற்றுச்சூழல் துறை அனுமதி

புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட சுற்றுச்சூழல் துறை அனுமதி
Updated on
1 min read

புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய சுற்றுச் சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

இப்போதைய நாடாளுமன்றம், அரசு அலுவலக கட்டிடங்களில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் விண்ணப்பிக்கப்பட்டது. இதுகுறித்து அந்த துறையின் உயர்நிலைக் குழு தீவிர ஆய்வு நடத்தியது. பல்வேறு தரப்பில் புதிய கட்டிடத்துக்கு ஆட்பேசம் தெரிவித்து 1,292 மனுக்கள் அளிக்கப்பட்டன. அனைத்தையும் பரிசீலனை செய்த உயர்நிலைக் குழு, புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட அண்மையில் அனுமதி வழங்கியது.

எனினும் கட்டுமான பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதியைப் பெற வேண்டும். புதிய நாடாளுமன்ற கட்டுமான திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும் என்று உயர்நிலைக் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய பொதுப்பணித் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

இப்போதைய நாடாளுமன்றம் 93 ஆண்டுகள் பழைமையானது. இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் நாடாளுமன்றமும் ஒன்றாகும். இந்த கட்டிடத்தை இடிக்கும் திட்டம் இல்லை. பழைய கட்டிடத்தை ஒட்டி 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது. 42 மீட்டர் உயரம் கொண்ட புதிய கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் 3 தளங்கள் கட்டப்படும்.

வருங்காலத்தை கருத்தில் கொண்டே புதிய நாடாளுமன்றம் கட்டப்படுகிறது. நீண்டகாலமாக கிடப்பில் இருந்த இத்திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்திருப்பதால் ஆரம்ப கட்டப் பணிகள் வேகம் பெறும்.

புதிய கட்டிடத்தில் அனைத்து துறைகளுக்கும் தேவையான அலுவலகங்கள் கட்டப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in