Published : 03 May 2020 08:07 AM
Last Updated : 03 May 2020 08:07 AM

உண்மை தகவல்களை மம்தா மறைப்பதாக மேற்கு வங்க ஆளுநர் தன்கர் குற்றச்சாட்டு

மேற்கு வங்கம் ஆளுநர் ஜக்தீப் தன்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மேற்கு வங்கத்தில் அதிகரித்து வருகிறது. ஆனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்த உண்மையான தகவல்களை முதல்வர் மம்தா பானர்ஜி மறைக்கிறார். கடந்த ஏப்ரல் 30-ம் தேதி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 572 என்று மாநில அரசின் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள் புதிதாக எத்தனை பேருக்கு பாதிப்பு, மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எவ்வளவு என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எவ்வளவு என்ற உண்மையான விவரத்தை முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட வேண்டும். அப்போதுதான், மாநில மக்களை கரோனா வைரஸ் தொற்றில் இருந்து காப்பாற்ற முடியும். வைரஸ் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்கு பல்வேறு மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதில் மேற்கு வங்க அரசு மட்டும் மத்திய குழுவுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. எல்லா விவகாரத்திலும் முதல்வர் மம்தா பானர்ஜி அரசியல் செய்யக் கூடாது. கரோனா வைரஸால் நெருக்கடியான காலகட்டத்தை சந்தித்து வரும் நிலையில், அரசியல் ரீதியாக அணுகாமல் கரோனா வைரஸை ஒழிக்க மம்தா பானர்ஜி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு ஆளுநர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x