

கடந்த 2 நூற்றாண்டுகளாக மக்கள் கூட்டத்துடன், காதைக் கிழிக்கும் செண்டை மேளங்கள், வாத்தியங்கள், மக்கள் ஆரவாரத்துடன் யானைகள் புடைசூழ நடத்தப்படும் கேரளாவின் வடக்குநாதன் கோயில் திருச்சூர் திருவிழா கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக எந்தவிதமான ஆரவாரமின்றி மக்கள் கூட்டமின்றி எளிமையாக இன்று நடந்து முடிந்தது.
கேரள திருவிழாக்களின் தாய்த் திருவிழா என்று அழைக்கப்படும் திருச்சூர் பூரம் திருவிழா மே 2-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக இந்த ஆண்டு திருவிழாவை அதிகாரபூர்வமாக ரத்து செய்ய கடந்த மாதம் 15-ம் தேதி எடுக்கப்பட்டிருந்தது. ஆதலால், கோயில் சம்பிரதாய முறைப்படி எளிமையாக இன்று நடந்தது.
பிரமேக்காவு, திருவெம்பாடி ஆகிய இரு கோயில்கள் சார்பில் பூரம் திருவிழா நடத்தப்படும். அதுமட்டுல்லாமல் பல்வேறு சிறு கோயில்களிலும் குட்டிபூரமும், வாண வேடிக்கைகளும் நடக்கும். 50க்கும் மேற்பட்ட யானைகள் அலங்கரிக்கப்பட்டும், செண்டை மேளங்கள் முழங்க நடத்தப்படும்.
ஆனால் பல கட்டுப்பாடுகள், சமூக விலகல்கள் காரணமாக இந்த முறை எந்தவிதமான ஆரவாரமும் இல்லாமல் திருவிழா இன்று நடந்தது. வடக்கு நாதன் கோயிலின் தெக்கின்காடு மைதானத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான யானைகள், அலங்கரிக்கப்பட்டு அணிவகுத்து நிற்கும்.
ஆனால், இந்த முறை கோயில் சம்பிரதாய முறைப்படி வடக்குநாதன் சிவன் கோயிலில் ஒரு யானை மட்டும் வரவழைக்கப்பட்டு கோயில் நிர்வாகிகள், தலைமை நம்பூதிரி உள்பட 5 பேர் மட்டும் பங்கேற்று பூஜைகள் செய்தனர். பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
திருச்சூர் பூரம் கோயிலுக்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக செண்டை மேளம் இசைக்கும் பெருவனம் குட்டன் மாரார் கூறுகையில், “திருச்சூர் பூரம் திருவிழா கேரள மக்களுடன் இரண்டறக் கலந்தது. மதம், சாதி பார்க்காமல் அனைவரும் பங்கேற்பார்கள். பூரம் திருவிழா ரத்து செய்யப்பட்டது உலகம் முழுவதிலும் உள்ள கேரள மக்களுக்கு இழப்பு. பூரம் கேரள மக்களின் பெருமை. எங்களின் இதயத்தோடு தொடர்புடையது. இனிமேல் அடுத்த ஆண்டு பூரத்துக்காக காத்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்
கடந்த 1798-ம் ஆண்டு கேரளாவின் ராஜா ராமவர்மா என்ற கொச்சி மன்னர் சக்தான் தம்புரான் சார்பில் திருச்சூர் பூரம் திருவிழா தொடங்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு முன் பூரம் திருவிழா ரத்து செய்யப்பட்டதே இல்லை என்று கோயில் சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், கடந்த 1948-ம் ஆண்டு மகாத்மா காந்தி கொல்லப்பட்டபோதும், சீனப் போரின்போதும் திருவிழா நடக்கவில்லை எனத் தெரிவிக்கிறார்கள்.