Published : 02 May 2020 03:05 PM
Last Updated : 02 May 2020 03:05 PM

காங்கிரீட் மிக்ஸர் வாகனத்தில் பதுங்கியிருந்து மாநிலம் விட்டு மாநிலம் பயணம்: இந்தூரில் சிக்கிய 18 பேர்; வீடியோ 

காங்கிரீட் மிக்ஸர் வாகனத்தில் பதுங்கியிருந்த பயணம் செய்த 18 பேர் இந்தூரில் சிக்கினர். இதன் வீடியோ காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் 24 முதல் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் முக்கியமான நகரங்கள், தங்கள் பணியிடங்களிலிருந்து சொந்த ஊருக்குச் செல்ல முயன்றனர். சிலர் கிடைத்த வாகனங்களிலும் சிலர் நடைபயணமாகவே சொந்த ஊரைச் சென்றடைந்தனர். எனினும் லட்சக்கணக்கான மக்கள் அங்கங்கே சிக்கிக்கொண்டனர். இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவர்.

தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமென சில மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதி அளிக்கும்படி எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்தன.

இதனைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. முன்னதாக பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் உள்ளிட்டோர் நடந்தும், கிடைத்த வாகனங்களிலும் பயணம் செய்து வந்தனர்.

அந்தவகையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் காங்கீரிட் கலவை தயார் செய்ய பயன்படும் மிக்ஸர் வாகனம் ஒன்றை போலீஸார் தடுத்து நிறுத்தினர். மகாராராஷ்டிர மாநிலத்தில் இருந்து அந்த வாகனம் உத்தர பிரதேச மாநிலம் லக்னோ சென்று கொண்டிருந்த நிலையில் தடுத்து நிறுத்தப்பட்டது. அந்த வாகனத்தை சோதனையிட்டபோது காங்க்ரீட் மிக்ஸர் தயார் செய்யும் இயந்திரத்தின் உட்பகுதியில் பதுங்கியிருந்த 18 பேர் பிடிபட்டனர்.

உ.பி.யைச் சேர்ந்த இவர்கள் சொந்த ஊர் செல்வதற்காக போலீஸூக்கு தெரியாமல் இந்த வாகனத்தில் மறைந்து இருந்து பயணம் செய்தது தற்போது தெரிய வந்துள்ளது. இதையடுத்து வாகனத்தை சீல் வைத்த போலீஸார் அவர்களை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x