ஜன்தன் வங்கிக் கணக்குள்ள பெண்களுக்கு 2-வது கட்டமாக ரூ.500 எப்போது வழங்கப்படும்? எந்தெந்த வரிசைக்கு எப்போது கிடைக்கும்?- மத்திய அரசு அறிவிப்பு

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் : கோப்புப்படம்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் : கோப்புப்படம்
Updated on
2 min read

ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு மே மாதத்துக்கான 500 ரூபாய் பணம் வரும் திங்கள்கிழமை முதல் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

வங்கிக் கணக்கின் வரிசை எண்கள் அடிப்படையில் நாள்தோறும் பணப் பரிமாற்றம் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தக் காலகட்டத்தில் ஏழை மக்களுக்கு ஏற்படும் பணப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் மாதம் ரூ.500 அடுத்த 3 மாதங்களுக்கு ஜன்தன் கணக்கு வைத்துள்ள பெண்களுக்குப் பரிமாற்றம் செய்யப்படும் என கடந்த மார்ச் 26-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி ஏப்ரல் மாதத்துக்கான ரூ.500 தொகை ஜன்தன் கணக்கு வைத்துள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் பரிமாற்றம் செய்யப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜன்தன் கணக்கு வைத்துள்ள 20.05 கோடி பெண்களுக்கு ரூ.500 வீதம், ரூ.10,025 கோடி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மே மாதம் பிறந்துள்ளதையடுத்து 2-வதுகட்ட தவணையாக 500 ரூபாய், ஜன்தன் கணக்கு வைத்துள்ள பெண் பயனீட்டாளர்களுக்கு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து நிதித்துறை செயலாளர் தேபாஷிஸ் பாண்டா ட்விட்டரில் இன்று பதிவிட்ட செய்தியில், “ஜன்தன் கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தில் 2-வது கட்டமாக 500 ரூபாய், வரும் திங்கள்கிழமை முதல் வங்கி மூலம் பரிமாற்றம் செய்யப்படும். வங்கிக்கணக்கு வரிசைப்படி பணம் அனுப்பப்படும். அதன்படி பெண்கள் வங்கி அல்லது ஏடிஎம் மையத்துக்குச் சென்று பணத்தைப் பெறலாம்.

வங்கியில் கூட்டத்தைக் குறைக்கும் பொருட்டும், சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் நோக்கில் வங்கி கணக்குதாரர்கள் 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பணம் டெபாசிட் செய்யப்படும்.

ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்துள்ள பெண்களின் வங்கிக் கணக்கின் கடைசி எண் 0 மற்றும் 1 என்று முடியும் கணக்குதாரர்களுக்கு மே 4-ம் தேதி பணம் டெபாசிட் செய்யப்படும்.

வங்கிக் கணக்கின் கடைசி எண் 2 அல்லது 3 என்று முடியும் கணக்குதாரரர்கள் வரும் 5-ம் தேதி வங்கியில் பணம் பெறலாம். 4 அல்லது 5 எண் வங்கிக் கணக்கில் கடைசியில் முடிந்தால் அந்தக் கணக்குள்ள பெண்கள் 6-ம் தேதியும், 6 மற்றும் 7 எண்ணில் முடியும் கணக்கு வைத்துள்ளவர்கள் மே 8-ம் தேதியும் வங்கியில் சென்று பணம் பெறலாம்.

வங்கிக் கணக்கின் கடைசி எண் 8 அல்லது 9 என முடிந்தால் மே 11-ம் தேதி சென்று வங்கி அல்லது ஏடிஎம்களில் பணம் பெறலாம். கூட்டத்தைத் தவிர்க்கும் பொருட்டு மே 11-ம் தேதிக்குப் பின் எப்போது வேண்டுமானாலும் பணத்தை வாடிக்கையாளர்கள் எடுத்துக்கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜன்தன் கணக்கு வைத்துள்ள பெண்கள் தங்களின் வீட்டுக்கு அருகே இருக்கும் ஏடிஎம், வங்கிகள், சிஎஸ்பி மையம் ஆகியவற்றில் சென்று பணம் எடுத்து கூட்டம் சேராதவாறு கவனத்துடன் இருக்கவேண்டும். எந்த வங்கியின் ஏடிஎம் மையத்திலும் இந்தக் காலகட்டத்தில் பணம் எடுக்கலாம். அதற்கு கட்டணம் விதிக்கப்படாது என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in