டெல்லியிலிருந்து பிஹாருக்கு சைக்கிளில் செல்ல முயன்ற புலம்பெயர் தொழிலாளி; வழியிலேயே உயிரிழந்த பரிதாபம் 

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

டெல்லியிலிருந்து பிஹாருக்கு சைக்கிளில் செல்ல முயன்ற புலம்பெயர்ந்த தொழிலாளர் ஒருவர் வழியிலேயே உயிரிழந்த பரிதாப சம்பவம் உ.பி.யில் நடந்துள்ளது.

கடந்த மார்ச் 24 ஆம் தேதி தொடங்கிய லாக் டவுன் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்ட நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களை சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க ஏப்ரல் 30 முதல் மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. அதுகுறித்து தெரியாதநிலையில் முன்னதாகவே சிலர் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல பல்வேறு வழிகளில் புறப்பட்டுச்சென்றனர். எனினும் அத்தகைய பயணங்கள் தொடங்கும்போது சாகசமாக இருந்தாலும் வழியில் எதிர்பாராத ஆபத்துகள் நிறைந்த பயணமாகவே அவை அமைகின்றன.

டெல்லியில் உள்ள தனது பணியிடத்திலிருந்து பிஹாரில் உள்ள வீட்டிற்கு சைக்கிளிலேயே செல்வதென முடிவு செய்த புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஷாஜகான்பூரில் மரணமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து உ.பி.யைச் சேர்ந்த ஷாஜகான்பூர் வட்ட அதிகாரி (நகரம்) பிரவீன் குமார் கூறியதாவது:

''தரம்வீர், (32) டெல்லியில் பணிபுரிந்துவந்த பிஹாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி. இவர் ஒருசில தொழிலாளர்களுடன் ஏப்ரல் 28 ஆம் தேதி டெல்லியில் இருந்து பிஹார் மாநிலம் ககாரியா மாவட்டத்திற்கு சைக்கிள் பயணத்தைத் தொடங்கினார்.

உத்தரப் பிரதேச எல்லைக்குள் நுழைந்த பிறகு வெள்ளிக்கிழமை இரவு அவர்கள் ஷாஜகான்பூரில் டெல்லி-லக்னோ நெடுஞ்சாலையில் தங்கள் பயணத்தை நிறுத்தினர். அப்போது தரம்வீரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் தொழிலாளர்கள் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதன்பின் கோவிட் பரிசோதனைக்காக தரம்வீரின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாக தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ராஜீவ் குப்தா தெரிவித்தார்.

தரம்வீருடன் சைக்கிள் பயணத்தில் ஈடுபட்ட சக தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் மாதிரிகளும் சோதனைக்கு அனுப்பப்படும்''.

இவ்வாறு ஷாஜகான்பூர் வட்ட அதிகாரி (நகரம்) பிரவீன் குமார் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in