

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள லாக் டவுனால் ஏப்ரல் மாத சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி வருவாய் வசூல் விவரங்களை அரசு தாமதமாக வெளியிடும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ரிட்டர்ன் தாக்கல் செய்யும் காலக்கெடுவையும் நீட்டிக்க இருப்பதாகத் தகவல் வந்துள்ளதால் ஏப்ரல் மாத வரிவருவாய் விவரங்கள் இப்போதைக்கு வெளிவராது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதியிலிருந்து லாக் டவுனை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இதனால் மார்ச் மாத ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்ய முடியாதவர்களுக்குக் காலக்கெடுவை நீட்டித்தது.
அதாவது ரூ.5 கோடிக்கு மேல் விற்று முதல் இருக்கும் நிறுவனங்கள் ரிட்டர்ன் தாக்கல் செய்ய கடைசித் தேதிக்கு மேல் கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். அபராதம், வட்டி, கூடுதல் கட்டணம் ஏதும் விதிக்கப்படாது என மத்திய அரசு அறிவித்தது. இதனால் மார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்யும் தேதி ஏப்ரல் 20-ம் தேதி மே 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதனால் வரி வசூலைக் கணக்கிடுவதில் தாமதம் ஏற்படும் என்பதால், வழக்கமாக வெளியிடும் தேதியில் ஜிஎஸ்டி வசூல் விவரங்கள் வெளியிடப்படாது. வழக்கமாக ஒரு மாதம் முடிந்தபின், அடுத்த மாதத் தொடக்கத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் விவரங்கள் வெளியிடப்படும். ஆனால் ஏப்ரல் மாதம் முடிந்தும் நேற்று வெளியாகவில்லை.
கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள சூழலைக் கருதி ரிட்டர்ன் தாக்கல் செய்யும் தேதியை மேலும் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவி்க்கின்றன. இதனால் ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வரி வசூல் விவரங்கள் வெளியிடும் தேதி குறித்து இதுவரை அதிகாரிகள் தரப்பில் முடிவு செய்யப்படவில்லை.
கடந்த 2019-20 ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி வரி வசூல் மொத்தம் 12 மாதங்களில் 7 மாதங்களில் ஒரு லட்சம் கோடியைக் கடந்தது. கடந்த மார்ச் மாதத்தில் ரூ.97,597 கோடி வசூலானது.
ஆனால் ஏப்ரல் மாதத்தில் லாக் டவுன் காலத்தில் ஏராளமான தொழில்கள், நிறுவனங்கள் மூடப்பட்டதால் ஜிஎஸ்டி வரி வசூல் எதிர்பார்த்த அளவு அதாவது ஒருலட்சம் கோடி வரை இருக்காது. இந்தக் காலகட்டத்தில் மருந்துத்துறை, உணவுப் பதப்படுத்துதல், நுகர்வோர் பொருட்கள் , தொலைத்தொடர்பு மட்டுமே இயங்கியதால் அதிலிருந்து மட்டுமே வருவாய் கிடைக்கும்.
மேலும், ஏப்ரல் மாதத்தில் குறைவான வரிவருவாய் கிடைக்கும் என்பதாலும் வரிவருவாய் விவரங்களை வெளியிட அரசு காலதாமதம் செய்கிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் மாதம் முழுமையும் லாக் டவுனில் இருந்ததால், மே மாத வருவாய் விவரங்கள் வரும்போதுதான் உண்மையான பாதிப்பு தெரியவரும் எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.