

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் 3-ம் கட்ட லாக் டவுனை மே 17-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து பயணிகள் ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து வரும் 17-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சி்க்கி இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலங்களில் சேர்ப்பதற்கான சிறப்பு ரயில் சேவை இயங்கும் என ரயில்வே தெரிவித்துள்ளது
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை முதல்கட்ட பொதுமுடக்கமும், அதைத் தொடர்ந்து ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை 2-வது கட்ட பொதுமுடக்கத்தையும் மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்தக் காலகட்டத்தில் நாடு முழுவதும் பயணிகள் ரயில் போக்குவரத்தும், உள்நாட்டு, சர்வதேச விமானப் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் கரோனா வைரஸ் பரவும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டாலும், நோயாளிகள் எண்ணிக்கை குறையவில்லை. இதனால் 3-ம்கட்ட ஊரடங்கை 17-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்து நேற்று அறிவித்தது.
இதையடுத்து ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கரோனா வைரஸ் பரவுவதை் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதால், பயணிகள் ரயில் போக்குவரத்து அனைத்தும் வரும் மே 17-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு மறு அறிவிப்பு வரும்வரை ஏதும் இருக்காது.
அதேசமயம், புலம்பெயர் தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் உள்ளிட்ட மற்றவர்கள் பல்வேறு மாநிலங்களின் எல்லைகளில் சிக்கி இருக்கிறார்கள். அவர்களை அவர்களின் சொந்த மாநிலங்களில் சேர்க்கும் வகையில் ஸ்ராமிக் சிறப்பு ரயில்கள் மாநில அரசுகள் வேண்டுகோளின்படி தேவைக்கு ஏற்றார்போல் உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி இயக்கப்படும். அதேசமயம் சரக்கு ரயில் போக்குவரத்து, பார்சல் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கும்” எனத் தெரிவித்துள்ளது.
டெல்லி சர்வதேச விமான நிலையம் வெளியிட்ட அறிவிப்பில், “மத்திய அரசு லாக் டவுனை வரும் 17-ம் தேதி வரை நீட்டித்ததுள்ளதைத் தொடர்ந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து தொடர்ந்து 17-ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை நிறுத்தப்படும். இந்த உத்தரவு சரக்கு விமானங்களுக்கும், சிறப்பு விமானங்களுக்கும் பொருந்தாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.