பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை ஆய்வு செய்து சஸ்பெண்டான ஐஏஎஸ்அதிகாரி தப்லீக் ஜமாத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் சர்ச்சை: கர்நாடக அரசு நோட்டீஸ்

ஐஏஎஸ் அதிகாரி முகமது மோசின்: கோப்புப்படம்
ஐஏஎஸ் அதிகாரி முகமது மோசின்: கோப்புப்படம்
Updated on
2 min read

மக்களவைத் தேர்தலின் போது பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை ஆய்வு செய்து சஸ்பெண்டான ஐஏஎஸ் அதிகாரி முகமது மோசின் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தப்லீக் ஜமாத் அமைப்பினருக்கு ஆதரவான கருத்தால் கர்நாடக அரசு ஐஏஎஸ் அதிகாரி முகமது மோசினுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின் போது, ஏப்ரல் மாதத்தில் ஒடிசாவுக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்த ஐஏஎஸ் அதிகாரி முகமது மோசின், பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டரை சோதனையிட முயன்றார். ஆனால், ப்ரோட்டோகால் அடிப்படையில் அதற்கு தடை இருப்பதால், விதிமுறைகளை மீறி செயல்பட்ட அதிகாரி முகமது மோசினை சஸ்பெண்ட் செய்துதேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது

இந்நிலையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் செயலாளராக 1996-ம் ஆண்டு பேட்ச் ஐஏஸ் அதிகாரி முகமது மோசின் பணியாற்றி வருகிறார்.

டெல்லி தப்லீக் ஜமாத்் அமைப்பின் மாநாட்டில் பங்கேற்று திரும்பிய பலருக்கும் கரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.பல்ேவறு மாநிலங்களில் இருந்து சென்றவர்களும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்தசூழலில் கரோனாவில் இருந்து குணமடைந்த தப்லீக் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்தனர். இது தொடர்பாக பல்வேறு செய்திகளும் வெளியாகின.

இதைக் குறிப்பி்ட்டு ஐஏஎஸ் அதிகாரி முகமது மோசின் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார், அதில் “ புது டெல்லியில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட தப்லீக் ஜமாத் ஹீரோக்கள் தங்கள் பிளாஸ்மாக்களை தானம் செய்ய முன்வந்து நாட்டுக்கு சேவையாற்றவுள்ளனர். ஆளும் அரசுக்கு ஆதரவாக செயல்படும் ஊடகங்களே என்ன செய்யப்போகிறார்கள். இந்த ஹீரோக்கள் செய்யும் மனிதநேயமான செயல்களை அவர்கள் வெளிக்கொண்டுவர மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்

பொறுப்புள்ள உயர்ந்த அதிகாரத்தில் இருக்கும் அதிகாரி முகமதுமோசின் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் கர்நாடக அரசு நோட்டீஸ்அனுப்பியுள்ளது. அந்தநோட்டீஸில் “ நீங்கள் ட்விட்டரில் தெரிவித்த கருத்து ஊடகங்களில் கடுமையாக விமர்சித்துவருவதை அரசு கவனத்தில் கொள்கிறது. கரோனா வைரஸ் தீவிரத்தில் உணர்வுகளும் நிறைந்துள்ளன. நீங்கள் குறிப்பிட்ட அந்த கருத்து 1968, அனைத்து இந்திய ஆட்சி்ப்பணி ஒழுக்க விதிகளை மீறியதாக இருக்கிறது. ஆதலால் 5 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். விளக்கத்தை அளிக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.

கரோனா வைரஸுக்கு எதிராக ஒற்றுமையாக அனைவரும் போராடும் இந்த நேரத்தில் மாநிலத்தின் சமூக ஒற்றுமையை குலைக்கும் வகையில் எந்தவிதமான அதிகாரித்தில் இருப்போரும் செயலை கர்நாடக அரசுஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்பதை தெளிவாகக் கூறுகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in