

ஏர்கூலர் தயாரிப்பில் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக விளங்கும் சிம்பொனி நிறுவனம், 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது. இந்தியாவில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிம்பொனி நிறுவனம், கரோனா நிவாரண உதவியாக குஜராத் மாநில அரசுக்கு 1,000 ஏர்கூலர்களை வழங்குகிறது. இதற்கு மாநில முதல்வர் விஜய் ரூபானி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகள், தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகள், சுகாதார மையங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த ஏர்கூலர்கள் வைக்கப்படவுள்ளன. இதன் மூலம் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பயன்பெறுவர். இதுகுறித்து சிம்பொனி நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அச்சல் பகெரி கூறியதாவது: தற்போது மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருப்பதால், கதவு, ஜன்னலை திறந்து வைத்திருப்பார்கள். இதுபோன்ற சூழலுக்கு சிம்பொனி ஏர்கூலர் மிகவும் ஏற்றது. தவிர, ‘ஐ-ப்யூர்’ என்ற தொழில்நுட்பத்துடன் கூடிய ஏர்கூலர்கள் காற்றை கூடுதலாக வடிகட்டி அனுப்புவதால் சுத்தமான, புத்துணர்ச்சியான காற்றை பெற முடியும். கரோனா ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள அரசுகளுக்கு நாம் அனைவரும் பக்கபலமாக நின்று, நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டிய நேரம் இது. தவிர, இந்த சமூகத்துக்கு உதவுவது ஒரு கார்ப்பரேட் நிறுவனமான எங்களது கடமையும்கூட என்று கூறினார்.