

உத்திரப்பிரதேசத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் ஈடுபட்டுள்ள போலீஸாருக்கு அதன் பாதிப்பிற்கு உள்ளாகும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன. இதை தடுத்து கரோனா பணியில் போலீஸாருக்கு உதவ அம்மாநில காவல்துறையில் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதில் போலீஸார் செய்யும் பணி மிகவும் பாராட்டத்தக்கதாக உள்ளது. இதில் உ.பி. மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் பணியாற்றும் போலீஸாருக்கும் கரோனா பாதித்துள்ளது.
இதுபோன்றவர்களை காக்கவும், கரோனா பரவை தடுப்பதில் முன்னின்று பணியாற்றும் போலீஸார் மீது சிறப்பு கவனம் அளித்து உதவவும் உபி காவல்துறை முன்வந்துள்ளது. இதற்காக அம்மாநில அரசின் சார்பில் சிறப்பு உதவிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உபி மாநிலக் காவல்துறையின் தலைமை இயக்குநர் ஜெனரலான ஹிதேஷ் சந்திரா அவஸ்தி கூறும்போது, ‘‘கரோனா பரவல் தடுப்பு பணி செய்வது குறித்து ஆலோசனைகள் இப்பிரிவில் அளிக்கப்படும். கரோனா தொற்று கொண்டவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் பணியாற்றுபவர்களுக்கு இது பெரிதும் உதவும்.
கரோனாவால் பாதிக்கப்படும் போலீஸாருக்கும் உடனடியாக சிறப்பு உதவிகள் அளிக்கும் பணியை செய்வதுடன் அவர்களது குடும்பத்தார் மீது இப்பிரிவு கவனம் செலுத்தும்.’’ எனத் தெரிவித்தார்.
உபியின் ஆக்ரா, வாரணாசி, முராதாபாத், கான்பூர் மற்றும் பிஜ்னோர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த போலீஸாருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 3 ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள், 5 தலைமை காவலர் மற்றும் 12 காவலர்களும் இடம் பெற்றுள்ளனர்.