

இந்திய பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்பு புதிய திருப்பமாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சபீர் அகமது ஷா நேற்று டெல்லி வந்தவுடன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
இதனால் டெல்லியில் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் ஆசிஷை அவர் சந்திக்க அனுமதிக்கப்பட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.
முகம்மது அப்துல்லா தாரி, ஜமீர் அகமது ஷேக் ஆகிய பிற பிரிவினைவாத தலைவர்களுடன் சபீர் அகமது ஷா நேற்று டெல்லியில் விமானத்தில் வந்து இறங்கினார்.
அப்போது, டெல்லி போலீஸாருடன் சென்ற மத்திய பாதுகாப்பு படையினர், டெல்லியில் அவர்கள் எங்கு தங்கவுள்ளனர் என்று விசாரித்து அவர்களை அங்கு கொண்டுபோய் சேர்த்தனர்.
பிறகு டெல்லியில் அவர்களின் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக எடுத்துக் கூறினர். இதையடுத்து தெற்கு டெல்லியில் உள்ள விருந்தினர் இல்லத்துக்கு மூவரும் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். சபீர் ஷாவுடன் வந்த ஜமீர், பிடிஐ செய்தியாளரிடம் கூறும்போது, “நாங்கள் நகர் திரும்பிச் செல்ல விரும்பினால் அதற்கு தடையேதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்” என்றார்.
சபீர் அகமது ஷா நேற்று டெல்லி புறப்படும் முன் நகரில் கூறும்போது, “பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் ஆசிஷை சந்திக்க விரும்புகிறேன். முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் இந்தியா வரும்போது, அவர்களை நாங்கள் சந்திப்பது தடுக்கப்படவில்லை. எனவே வாஜ்பாய், எல்.கே.அத்வானி, மன்மோகன் சிங் போன்ற தலைவர்கள் தவறு செய்துள்ளார்களா என இந்திய மக்களை கேட்க விரும்புகிறேன்” என்றார்.