

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் சிக்கத்தவித்த வெளிமாநில தொழிலாளர்கள் சிறப்பு இடைநில்லா ரயில் மூலம் தெலங்கானாவிலிருந்து ஜார்க்கண்டிற்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.
தெலங்கானாவின் லிங்கம்பள்ளி ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 5 மணிக்கு 1,200 புலம்பெயர் தொழிலாளர்களுடன் ஜார்கண்ட் மாநிலம் ஹாதியாவுக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது.
வழக்கமாக ஒரு பெட்டியில் 74 பயணிகள் பயணிக்கும் நிலையில் சமூக விலகலைக் கடைபிடிக்கும் நோக்கில் 54 தொழிலாளர்கள் மட்டுமே பயணித்தனர். மொத்தம் 24 பெட்டிகள் சிறப்பு ரயிலில் இணைக்கப்பட்டிருந்தன
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மாதம் 25-ம் தேதியிலிருந்து லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதனால் மாநிலங்களில் பஸ்போக்குவரத்து, பயணிகள் ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பல்வேறு மாநிலங்களில் வேலைக்காக புலம்பெயர்ந்து சென்ற தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடிவு செய்து கால்நடையாக வரத் தொடங்கினர்.
ஆனால், சமூக விலகலைப் பின்பற்றாமல் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களால் கரோனா வைரஸ் பரவும் அச்சத்தால் புலம்பெயர் தொழிலாளர்கள் அந்தந்த மாநில எல்லைகளில் தடுக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு, தங்குமிடங்களை மாநில அரசுகள் அளித்து வந்தன.
இ்ந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தரப்பிலும் மாநிலங்கள் தரப்பிலும் விடுக்கப்பட்டது. இதையடுத்து, புலம் பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் ஆகியோர் சொந்த மாநிலங்களுக்கு செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்தது.
அந்த அடிப்படையில் தெலங்கானா அரசும், ஜார்கண்ட் அரசும் தங்கள் மாநிலத்தொழிலாளர்களை அழைத்துவர சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று ரயில்வே துறை இடைநில்லா சிறப்பு ரயிலை புலம் பெயர் தொழிலாளர்களுக்காக இன்று இயக்கியது. இதன்படி தெலங்கானா மாநிலம் லிங்கம்பள்ளி ரயில் நிலையத்திலிருந்து 24பெட்டிகளுடன் 1200 புலம்பெயர் தொழிலாளர்கள் ஜார்கண்ட் மாநிலம் ஹதியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படையி்ன் இயக்குநர் ஜெனரல் அருண் குமார் கூறுகையில் “ தெலங்னாவின் லிங்கம்பள்ளயிலிருந்து இடைநில்லா ரயில் ஜார்கண்ட் மாநிலம் ஹதியாவுக்கு இன்று காலை புறப்பட்டது.வழக்கமாக ஒரு பெட்டியில் 74 பேர் பயணிப்பர். ஆனால் சமூக விலகலை பின்பற்றி 54 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டது. இந்த ரயில் இன்று இரவு 11 மணிக்கு ஹதியா நகரம் சென்றடையும்.
இந்த ரயிலில் பயணிக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் அனுப்பி வைக்கப்பட்டனர்” எனத் தெரிவித்தார்
தெலங்கானா அரசின் கோரிக்கையைத் தொடர்ந்து ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், பிஹார், மகாராஷ்டிரா, கேரள மாநிலங்களும் புலம்பெயர் தொழிலாளர்களை அனுப்பி வைக்க சிறப்பு இடைநில்லா ரயிலை இயக்க ரயில்வேக்கு கோரிக்ைக வைத்துள்ளன.