Published : 30 Apr 2020 10:48 PM
Last Updated : 30 Apr 2020 10:48 PM

ரூ.68,000 கோடி வாராக்கடன் நிறுத்தி வைப்பா? தள்ளுபடியா? ஏட்டுச்சுரைக்காய் விவாதம்: ப.சிதம்பரம் பதில்

ரூ.68,000 கோடி வாராக்கடன் நிறுத்திவைப்பா? தள்ளுபடியா? என விவாதிப்பது ஏட்டுச்சுரைக்காய் விவாதம். கடனை வசூல் செய்யும் வழியைப் பாருங்கள் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

“டெக்னிக்கலி ரைட் ஆஃப்” அல்லது “கணக்கியல் ரீதியாக தள்ளுபடி” என்பது வங்கியின் வரவு-செலவுக் கணக்கில் மேற்கொள்ளப்டும் செயலாகும். அதாவது ரிசர்வ் வங்கிக்கு அளிக்கும் கணக்கில் ஒரு வங்கி தனது வாராக்கடனை, செயல்படா சொத்துகளைத் தள்ளுபடி செய்ததாக கணக்கீடு ரீதியாகக் காண்பிக்கும்.

ஆனால், கடன் கொடுத்த வங்கிக் கிளையைப் பொறுத்தவரை இந்தக் கடன் தள்ளுபடி செய்யப்படாது. கடன் வாங்கிய நபரிடம் இருந்து கடன் தொகையைப் பெறும் முயற்சி தொடர்ந்து நடக்கும்.

தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் சாகேத் கோகலே தாக்கல் செய்த மனுவில், பிப்ரவரி 16-ம் தேதி வரை கடன் வாங்கி வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் முதல் 50 நபர்களின் பட்டியலை ரிசர்வ் வங்கியிடம் கேட்டிருந்தார். அதில் ரூ.68 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டது தெரியவந்தது. இதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதில் அளித்திருந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ராகுல் காந்திக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.‘‘கடன் தள்ளுபடி என்பது வேறு, வாராக் கடனைக் கழித்துவிட்டு கணக்கு வைத்திருப்பது என்பது வேறு.

இது வங்கிகளின் வழக்கமான நடைமுறை. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வந்து சேராத கடன்களை கணக்குப்படி தனித்து வைப்பது என்பது வங்கி நடைமுறை. இதைப் பற்றியெல்லாம் ராகுல் காந்திக்கு எப்படி தெரியும். முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் ராகுல் காந்தி டியூஷன் கற்க வேண்டும்’’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“ரூ.68,000 கோடி வாராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தார்களா, நிறுத்தி வைத்துள்ளார்களா என்பது ஏட்டுச் சுரைக்காய் விவாதம். இந்த நடவடிக்கையை மகிழ்ச்சியோடு கொண்டாடுபவர்கள் நிரவ் மோடி, மெஹுல் சோக்சி மற்றும் விஜய் மல்லையா.

இந்த மாபெரும் தவறைத் திருத்துவதற்கு ஒரே வழிதான் உண்டு. ரிசர்வ் வங்கி உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவிடவேண்டும். மீண்டும் இந்த மூன்று நபர்களுடைய வாராக் கடன் தொகைகளை ‘வாராக் கடன்’ என்று பேரேட்டில் எழுதி அந்தக் கடன்களை வசூலிக்கும் முயற்சிகளை முடுக்கி விடுக என்று உத்தரவிடவேண்டும்”.


இவ்வாறு சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x