

அறிகுறியற்ற நோயாளிகள் கோவிட் மையங்களுக்கு அனுப்பினால் போதுமானது; மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டாம், உயிரிழந்த கோவிட் நோயாளிகளின் உடல்கள் 12 மணிநேரத்திற்குள் அகற்றப்பட வேண்டும் என மகாராஷ்டிரா அரசு மருத்துவமனைகளுக்கு கடுமையான உத்தரவுகளை வழங்கியுள்ளது.
மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் நோய் புதியதாக 597 பேரை பாதித்துள்ள நிலையில் அங்கு மொத்த கோவிட் 19 நோயாளிகள் எண்ணிக்கை 9915 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் மாநிலமெங்கும் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளுக்கு மகாராஷ்டிரா அரசு வியாழக்கிழமை புதிய கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
கோவிட் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு மகராஷ்டிரா அரசு ஏப்ரல் 30 அன்று வழங்கிய உத்தரவில் கூறியுள்ளதாவது:
அறிகுறியற்ற அனைத்து நோயாளிகளும் உடனடியாக பொருத்தமான கோவிட் பராமரிப்பு மையங்களுக்கு மாற்றப்பட வேண்டும், கோவிட் அறிகுறியற்ற ஆனால் கரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்படுவதில்லை என்று கோவிட் மற்றும் கோவிட் அல்லாத மருத்துவமனைகள் உறுதி செய்ய வேண்டும்.
இதேபோல், தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் 'கோய்' வழிகாட்டுதல்களின்படி முறையான ஆலோசனையின் பின்னர் அறிகுறியற்ற கரோனா நோயாளிகள் முத்திரையிடப்பட்டு வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட வேண்டும்.
சந்தேகத்திற்கிடமான கோவிட் நோயாளிகள் பயன்படுத்திய அனைத்துவிதமான துணியையும் உடனுக்குடன் சேகரிப்பதற்கு மருத்துவமனைகள் முதல் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். நோயாளிகள்கோவிட் சுகாதார மையம் அல்லது பிரத்யேக கோவிட் மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுவதையும் மருத்துவமனைகள் உறுதி செய்ய வேண்டும்.
கோவிட் பாதிப்புக்குள்ளான ஒரு நோயாளிக்கு மரணம் ஏற்பட்டால், இறந்த 30 நிமிடங்களுக்குள் இறந்த உடல் வார்டில் இருந்து மாற்றப்படுவதை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும், மேலும் 12 மணி நேரத்திற்குள் உடலை அப்புறப்படுத்த வேண்டும்.
மும்பை நகர எல்லைக்குள் ஆம்புலன்ஸ் அணி திரட்டப்படுவது குடிமை அமைப்பின் பேரிடர் மேலாண்மைத் துறையால் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
நோயாளி பரிசோதனை செய்யப்படுவதற்கும், இடமாற்றம் செய்யப்படுவதற்கும், அனுமதிக்கப்படுவதற்கும் மற்றும் வெளியேற்றத்திற்கும் சுகாதார சேவைகளின் இயக்குநர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மருத்துவமனையில் அனுமதி தேவைப்படும் ஒவ்வொரு நோயாளிக்கும் மும்பை குடிமை அமைப்பின் பேரழிவு மேலாண்மைத் துறையின் சுற்று குழுவினரால் ஒரு தனித்துவமான அடையாள அட்டை வழங்கப்படும், இது இல்லாமல் அனுமதி வழங்கப்படாது.
இந்த உத்தரவுகள் 2020 மே 2 காலை 10 மணி முதல் அமலுக்கு வரும்.
இவ்வாறு மகாராஷ்டிரா அரசு மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.