Published : 30 Apr 2020 01:33 PM
Last Updated : 30 Apr 2020 01:33 PM

வீட்டுக்குள் இருந்தால் தங்கக் காசு, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் பரிசு: கரோனாவைத் துரத்த கேரள கிராமத்தின் அசத்தல் திட்டம்

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய - மாநில அரசுகள் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், கேரள உள்ளாட்சி அமைப்புகள் பல்வேறு ஆக்கபூர்வமான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.

ஆலப்புழா மாவட்டத்தின் தண்ணீர்முக்கம் பஞ்சாயத்து, வீட்டில் இருந்து வெளியே வருபவர்கள் கட்டாயமாகக் குடை வைத்திருக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அதை அமல்படுத்தி வருகிறது. அதேபோல் மலப்புரம் மாவட்டத்தில் தளிக்கோடு கிராமப் பஞ்சாயத்து, வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பவர்களுக்கு பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

மே 3-ம் தேதி, பொதுமுடக்கம் முடிவுக்கு வரும் பட்சத்தில் அன்றைய நாளில் பரிசு பெற்றோர் அறிவிக்கப்படுவர் என்கிறார் தளிக்கோடு கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் ஏ.கே.நாசர்.

இதுகுறித்து அவர் 'இந்து தமிழ் திசை'யிடம் கூறுகையில், “இந்தியா முழுமைக்கும் முதலாவது பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோதே இந்தப் போட்டியை அறிவித்தோம். விதிப்படி, பொதுமுடக்கக் காலத்தில் வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது. மிக அத்தியாவசியமான தேவையாக இருந்தால் விலக்கு உண்டு. அதில் பால், காய்கனி, மருத்துவத் தேவை ஆகியவை வரும். ஒவ்வொரு வீட்டிற்கும் அவர்களது அண்டை வீட்டுக்காரர்களே கண்காணிப்பாளர்கள். வீட்டைவிட்டு வெளியே வராமல் இருந்தால் முதல் பரிசாக அரைப் பவுன் தங்கக் காசும், இரண்டாம் பரிசாக குளிர்சாதனப் பெட்டியும், மூன்றாம் பரிசாக வாஷிங் மெஷினும் வழங்க இருக்கிறோம்.

இதுதவிர, 50 பேருக்கு ஊக்கப் பரிசும் உண்டு. இப்போதைய நிலையில் சவாலை ஏற்றுப் பலரும் விதிகளைக் கடைப்பிடிப்பதால் வெற்றியாளர்களைக் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் வாய்ப்பே அதிகம். எங்கள் மக்களில் யாருக்குப் பரிசு கிடைக்கும் என்பதைவிட, பொதுமுடக்கத்தின் போது தேசத்திற்கு எங்கள் கிராமம் கொடுக்கும் பரிசு இது” என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x