காசர்கோடு மாவட்ட ஆட்சியர், மனைவி தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தல் 

காசர்கோடு ஆட்சியர் சஜித் பாபு  : படம் உதவி ஃபேஸ்புக்
காசர்கோடு ஆட்சியர் சஜித் பாபு : படம் உதவி ஃபேஸ்புக்
Updated on
1 min read

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்ட ஆட்சியர் கரோனா பாதித்த பத்திரிகையாளருக்குப் பேட்டி அளித்ததையடுத்து ஆட்சியரைத் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்

கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற சேனல் ஒன்றின் நிருபருக்கு சமீபத்தில் கரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. மாநிலத்தில் கரோனாவில் பாதிக்கப்பட்ட ஊடகத்துறையைச் சேர்ந்த முதல் நபரும் அந்த நிருபர்தான்.

இந்நிலையில் கடந்த 19-ம் தேதி அந்த குறிப்பிட்ட சேனலின் நிருபருக்கு காசர்கோடு மாவட்ட ஆட்சியர் டி.சஜித் பாபு நேர்காணல் அளித்தார். இந்த நேர்காணல் 10 நிமிடங்கள் வரை நீடித்துள்ளது. அடுத்த சில நாட்களில் அந்த நிருபருக்கு கரோனா அறிகுறிகள் தென்படவே அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது

இதையடுத்து, அந்த நிருபருக்குப் பேட்டி அளித்த காசர்கோடு ஆட்சியர் சஜித் பாபு, அவரின் பாதுகாவலர் ஆகியோரை தனிமைப்படுத்திக்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்

இதுகுறித்துஆட்சியர் சஜித் பாவு அளித்த பேட்டியில், “அந்தக் குறிப்பிட்ட சேனலின் நிருபருக்கு கடந்த 19-ம் தேதி பேட்டி அளித்தேன். இப்போது அந்த நிருபருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் என்னையும் எனது மனைவி, எனது பாதுகாவலரையும் சுயதனிமைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

இதுதவிர அந்த சேனலின் நிருபருடன் வந்திருந்த கார் ஓட்டுநர், கேமராமேன், லைட் மேன் உள்ளிட்ட 3 பேரும் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்தத் தொலைக்காட்சி சேனலில் பலருக்கும் கரோனா பரிசோதனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in