

ஏப்ரல் 20ம் தேதி ஊரக வேலைகளைத் தொடங்க மத்திய அரசு வெளிப்படையாக உத்தரவுகளைப் பிறப்பித்தாலும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் கீழ் 30 லட்சம் பேர்களுக்கே வேலை கிடைத்துள்ளது. அதாவது இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 82% குறைவு என்று அரசு தரப்பு தரவுகளே தெரிவிக்கின்றன.
ஏப்ரல் மத்தியில் வழக்கமான தொழிலாளர்களில் 1% தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் வேலை கிடைத்துள்ளது.
இந்த ஏப்ரலின் புள்ளி விவரங்கள் கடந்த 5 ஆண்டுகளில் மிகவும் குறைவாகும். 82% சரிவு கண்டுள்ளது, கடந்த ஆண்டில் 1.7 கோடி பேருக்கு வேலை கிடைத்தது. ஏப்ரல் 29ம் தேதி நிலவரப்படி சில மாநிலங்களில் இந்தத் திட்டத்தின் கீழ் ஒருவருக்குக் கூட வேலை கிடைக்கவில்லை என்பதுதான் புள்ளி விவரங்கள் தெரிவிக்கும் தகவலாகும். அதாவது இந்த மாநிலங்களில் பணியிடங்களில் வேலைகள் இன்னமும் தொடங்கப்படவேயில்லை.
ஹரியாணாவில் 1005 பேருக்குத்தான் வேலை கிடைத்துள்ளது. கேரளாவில் 2014, குஜராத்தில் 6376 பேருக்கு வேலை கிடைத்துள்ளது, ஆனால் இவை மிகவும் குறைவான எண்ணிக்கையே. ஆந்திராவில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது ஆனாலும் இதுவும் கூட கடந்த ஏப்ரலில் வழங்கப்பட்ட 25 லட்சத்தை ஒப்பிடும்போது குறைவே.
லாக்டவுன் காலத்தில் தொழிலாளர்கள் வேலையின்றி இருக்கின்றனர், புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த கிராமம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர், இந்நிலையில் அரசு வேலை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தினால் இழைப்பீடு கூலி கேட்டு நிறைய பேர் குரல் எழுப்பி வருகின்றனர்.
“மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 10 நாள் சம்பளத்தை ரொக்கமாக அளிக்க வேண்டும். தனியார் நிறுவனங்களை சம்பளம் கொடுக்க வேண்டும் என்று கூறும் அரசு, தான் முதலில் சம்பளம் கொடுத்து முன் மாதிரியாகத் திகழ வேண்டாமா?” என்று பொருளாதார நிபுணர் ரீதிகா கேரா என்பவர் கேள்வி எழுப்புகிறார். இவர் ஐஐஎம், அகமதாபாத் பேராசிரியர் ஆவார்.
ஏப்ரல் 4ம் தேதியன்று மஸ்தூர் கிசான் சக்தி சங்கதன் என்ற அமைப்பின் செயல்பாட்டாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேற்கொண்ட மனுவில் 7.6 கோடி வேலை அட்டை வைத்திருப்போருக்கு லாக்டவுன் காலம் முழுதும் முழு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
பணிக்காக தொழிலாளர் ஒருவர் இந்தத் திட்டத்தில் பதிவு செய்கிறார்,, ஆனால் அவருக்கு பணி ஒதுக்கப்படவில்லை எனில் அவருக்கு வேலையின்மை சலுகைத் தொகை , அதாவது அவரது சம்பளத்தில் கால்வாசித் தொகை முதல் மாதத்தில் அளிக்க வேண்டும். 2ம் மாதத்தில் அரைமாத சம்பளமும் அதன் பிறகு முழு சம்பளமும் அளிக்க வேண்டும்.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் 61,500 கோடி இந்தத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது விஸ்தரிக்கப்பட வேண்டும், ஏனெனில் கோவிட்-19 ஒரே நேரத்தில் பலரது வேலைகளையும் பறித்துள்ளது என்று மனு செய்த சமூக ஆர்வலர் நிகில் தேவ் கூறுகிறார்.
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்ட தொழிலாளர்களை ரேஷன் பொருட்கள் விநியோகத்திலும் வேளாண் சந்தைகளிலும் பயன்படுத்தி கிராமப்புறங்களில் இடையூறு அடைந்த சப்ளை சங்கிலியை மீட்டெடுக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு பரிந்துரைக்கின்றனர். அரசின் காதில் விழுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.