Last Updated : 30 Apr, 2020 08:49 AM

 

Published : 30 Apr 2020 08:49 AM
Last Updated : 30 Apr 2020 08:49 AM

மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் சிக்கிய உ.பி. தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப விருப்பம்: ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் ஹெல்ப்லைனை தொடர்பு கொண்டனர்

புதுடெல்லி

வெளி மாநிலங்களில் சிக்கி உள்ள உத்தரபிரதேச மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக அரசின் ஹெல்ப்லைனை தொடர்பு கொள்வது அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் உதவி கேட்டு போன் செய்துள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாகநாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால்பிழைப்பு தேடி வெளிமாநிலங்களுக்கு சென்ற கூலித் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இவர்களில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் பல நூறு கிலோமீட்டர் தொலைவு நடந்தே சொந்த ஊருக்கு திரும்பினர். இதனால் அம்மாநில முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், அனைவரையும் அரசுப் பேருந்துகளில் ஏற்றி அவர்களது வீடுகளில் சேர்க்க நடவடிக்கை எடுத்தார்.

இதையடுத்து, கடந்த 18-ம்தேதி முதல் ராஜஸ்தானின் கோட்டாநகரில் சிக்கி தவித்த சுமார் 9,000 மாணவர்களை ஒரு வாரத்தில் மீட்டது உத்தரபிரதேச அரசு. இதேபோல, சத்தீஸ்கர், அசாம் மற்றும் மத்தியப்பிரதேச அரசுகளும் தங்களது மாணவர்களை மீட்டனர்.

இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் தங்கியுள்ள தொழிலாளர்கள் தங்களை மீட்கும்படி உத்தரப் பிரதேச மாநில அரசை வலியுறுத்துவது அதிகரித்துள்ளது. இவர்களில் மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் இருந்துநேற்று மட்டும் 97,754 பேர் உத்தரபிரதேச அரசின் ஹெல்ப்லைனுக்கு போன் செய்து ஊர் திரும்ப உதவி கேட்டுள்ளனர். இதே உதவிக்காக டெல்லியில் இருந்து சுமார் 45,000 தொழிலாளர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் உத்தரபிரதேச மாநிலஅரசு அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, “இந்த போன்கள் மூலம் சுமார் பத்து லட்சம் உத்தரபிரதேச மாநில தொழிலாளர்கள் வெளி மாநிலங்களில் சிக்கியிருக்கலாம் எனக் கருதுகிறோம். மகாராஷ்டிராவின் முக்கிய நகரங்களிலும், டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் எங்கள் மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர்.

இதனால் அனைத்து மாநில அரசுகளிடமும் உத்தரபிரதேச மாநில தொழிலாளர்கள் எண்ணிக்கையின் பதிவைக் கேட்டிருக்கிறோம். அதேசமயம் அருகிலுள்ள மாநிலங்களில் இருப்பவர்களை ஊருக்கு திரும்ப அழைக்கும் பணியும் தொடர்கிறது” என்றனர்.

உ.பி. தொழிலாளர்களை போன்றே பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த பல லட்சம் கூலித் தொழிலாளர்களும் வெளி மாநிலங்களில் உள்ளனர். இவர்களையும், கோட்டாவில் சிக்கியுள்ள தனது மாநிலமாணவர்களையும் மீட்க பிஹார்முதல்வர் நிதிஷ் குமார் மறுத்துவிட்டார். சமூக இடைவெளிக்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கிற்கு அர்த்தம் இல்லாமல் போகும் என்பது நிதிஷின் வாதமாக உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் உரையாடிய போதும் நிதிஷ் குமார் இப் பிரச்சினையை எழுப்பி இருந்தார். அப்போது வெளி மாநிலத்தில் சிக்கியவர்களை திரும்ப அழைப்பதில் தேசிய அளவில் ஒரு பொது கொள்கையை ஏற்படுத்தும் வரை பிஹார் அரசு, யாரையும் திரும்ப அழைக்காது என தெரிவித்திருந்தார்.

பிஹாரில்..

இதற்கு முடிவு ஏற்படாததால் பிஹார் தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கின்றனர். கோட்டாவில் சிக்கிஉள்ள மாணவர்களை மீட்க தொடுக்கப்பட்ட பல பொதுநல வழக்குகளும் பாட்னா உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x