Published : 30 Apr 2020 08:10 AM
Last Updated : 30 Apr 2020 08:10 AM

கேரளாவிலேயே பெரிய வீட்டுக்குச் சொந்தக்காரர்; துபாயில் உயிரிழந்த தொழிலதிபரின் உடல் ஒரு வாரத்துக்கு பின் சொந்த ஊர் வருகிறது

திருவனந்தபுரம்

கேரள மாநிலம், வயநாடு பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜாய் அரக்கல் (54) துபாயில் உயிரிழந்தார். ஒரு வாரத்துக்கு பிறகுஅவரது உடலை இந்தியா கொண்டுவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கேரள மக்களுக்கு பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் ஜாய் அரக்கல் நேசக்கரம் நீட்டத் தவறியதில்லை. கடந்த ஆண்டு கேரளாவை பெருவெள்ளம் புரட்டிப்போட்டது. அப்போது, தனது மானந்தவாடி கிராமத்தில் உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தை ஏழைகளுக்கு கொடுத்தார். அதில் இப்போது வீடுகள் கட்டப்பட்டு நிறைவு கட்டத்தைஎட்டியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட தனது கிராம மக்கள் தங்குவதற்காக தனது பிரம்மாண்ட கட்டிடத்தையும் திறந்து விட்டார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பெட்ரோலியம், பெட்ரோலிய வேதிப்பொருட்கள் சார்ந்த வர்த்தகம்செய்து வந்தார் ஜாய். அத்துடன்,11 நிறுவனங்களையும் நடத்திவந்தார். அவரது பணியாளர்களில் பெரும்பான்மையினர் அவரது சொந்த ஊரான மானந்தவாடியை சேர்ந்தவர்கள். இதன்மூலம் தனது கிராமப் பொருளாதாரத்தையும் கணிசமான அளவுக்கு உயர்த்தினார்.

அதேபோல மானந்தவாடியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைக்கும் இவர்தான் இடம் வழங்கினார். எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஜாய் அரக்கல்பகுதி நேரமாக வேலை செய்தேகல்வி பயின்றார். ஆரம்பத்தில் தேயிலை, நல்ல மிளகு ஏற்றுமதிசெய்து வந்தவர், தொழில் நிமித்தமாக துபாய் சென்றதுதான் அவரது வாழ்வில் திருப்புமுனையானது.

பிரம்மாண்ட வீடு

மானந்தவாடி கிராமத்தில் இருக்கும் ஜாய் அரக்கலின் வீடுதான் மாநிலத்திலேயே மிகப்பெரிய வீடு. இந்த வீடு 45,000 சதுர அடி பரப்புக் கொண்டது. 180 டிகிரி கோணத்தில் வரவேற்பரையோடு தொடங்கும் இந்த வீட்டில், சிறிதும், பெரிதுமான இரண்டு சாப்பாட்டு அறைகள், 3 சமையலறைகள், வழக்கத்தைவிட இரண்டு மடங்கு பெரிதான 8படுக்கை அறைகள், ஹோம் தியேட்டர், பிரார்த்தனை அறை, நீச்சல் குளம், பொழுதுபோக்கு அறை என நீள்கிறது வசதிகள். இவருக்குதுபாயில் சொந்தமாக கப்பலும்ஓடுவதால் அங்குள்ள மக்கள் ‘கப்பல் ஜாய்’என்றுஅழைக்கின்றனர்.

துபாய் அரசு கவுரவம்

ஜாய் அரக்கலுக்கு ‘தங்க அட்டை’ வழங்கி கவுரவித்துள்ளது ஐக்கிய அரபுஅமீரகம்.அந்நாட்டு குடிமகனுக்கு இணையான அங்கீகாரத்தையும், அரசு அலுவல்களில் முன்னுரிமையும் அளிக்கும் தங்க அட்டை பெற்ற 2-வது இந்தியன் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

கடந்த ஆண்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் துபாய் சென்ற போது, ஜாய் அரக்கலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தார். தன் தொழிலாளர்களுக்கும் ஏராளமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தஅவர், கடந்த 24-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். ஜாய்க்கு ஷெலின் என்ற மனைவியும், அருண் ஜாய், அஸ்லின் ஜாய் என இரு மகன்களும் உள்ளனர்.

துபாயில் உயிரிழந்த ஜாய் அரக்கலின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர அவரது குடும்பத்தினர் கடந்த ஒரு வாரமாகவே முயற்சித்து வந்த நிலையில், வெளியுறவு, உள்துறை அமைச்சகம் அதற்கான அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் துபாயில் இருந்து ஜாய் அரக்கலின் உடல் தனி விமானம் மூலம் கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வர உள்ளது. ஜாய் அரக்கல் இறப்பு செய்தியை கேள்விப்பட்ட நாள் முதலே மானந்தவாடி பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் கறுப்பு கொடி கட்டி துக்கம் அனுசரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x