Published : 28 Apr 2020 09:55 PM
Last Updated : 28 Apr 2020 09:55 PM

கரோனா; அத்தியாவசியப் பொருட்கள்-  மாநில எல்லைகளுக்கு இடையிலான வாகனப் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும்: நிதின் கட்கரி வலியுறுத்தல்

புதுடெல்லி

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அத்தியாவசியப் பொருட்களை சுமுகமான முறையில் எடுத்துச் செல்வது அவசியம் என்பதால் மாநில எல்லைப் பகுதிகளுக்கு இடையிலான வாகனப் போக்குவரத்து, தடையின்றி நடைபெறும் வகையில், உடனடி நடவடிக்கை மிக விரைவில் எடுக்க வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கேட்டுக்கொண்டுள்ளார்.

கரோனா பெருந்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்க காலத்தின் போது, பொதுமக்கள் வாழ்க்கையில் சிரமங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக, சரக்கு வாகன போக்குவரத்துக்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கு, உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சாலை போக்குவரத்து அமைச்சர்களுடன் காணொலி மாநாட்டின் மூலமாகப் பேசிய கட்காரி, இது போன்ற விஷயங்களில், அமைச்சர்கள் தலையிட்டு, உள்ளாட்சி மாவட்ட நிர்வாகங்கள் மூலமாக, பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஒருவருக்கொருவர் தகுந்த இடைவெளி விட்டு இருப்பது, முகக்கவசங்களை அணிந்து கொள்வது, தொற்று சுத்திகரிப்பான்களை பயன்படுத்துவது, ஓட்டுநர்கள் உதவியாளர்கள் சுத்தம் செய்பவர்கள் மற்றும் டாபாக்களில் உள்ளவர்கள் ஆகியோரும், சுகாதார அறிவுரைகளையும், விதிமுறைகளையும் பின்பற்றுவதும் மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொழிலாளர்களை தொழிற்சாலைகளுக்கு அழைத்துச் செல்கையில், ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் இடையே குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தொலைவு இடைவெளி விடுதல், முகக் கவசங்கள் அணிதல், சானிடைசர்களைப் பயன்படுத்துதல் போன்ற சுகாதார அறிவுரைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் கட்காரி குறிப்பிட்டார்.

தொழிலாளர்களுக்கு உணவு உறைவிடம் ஆகியவற்றை வழங்குவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், அதே சமயம், அனைத்து பணிகளிலும் சமூக விலகியிருத்தல் மற்றும் தூய்மை ஆகியவற்றுக்கான விதிகளை முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஆலோசனை ஒன்றுக்கு பதிலளித்துப் பேசிய திரு கட்காரி, போக்குவரத்து தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக தமது அமைச்சகம் ஹெல்ப்லைன் ஒன்றைத் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

சாலை மேம்பாடு, நெடுஞ்சாலை கட்டமைப்பு ஆகியவற்றுக்கு தாம் உயர் முன்னுரிமை அளிப்பதாகவும், இன்னும் இரண்டு ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலை கட்டுமான வசதிகள், தற்போதைய கால அளவிலேயே, இரண்டு மூன்று மடங்கு அதிகரிக்க திட்டமிடப் பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் கட்காரி தெரிவித்தார்.

நிலங்களை கையகப்படுத்தும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று, மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களை அவர் வலியுறுத்தினார். இதில் ஏற்படும் தாமதங்கள் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் என்று அவர் கூறினார். சுமார் ரூ 25,000 கோடி அளவிற்கான நிதி, மாநிலங்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும், இந்த நிதியைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x