

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கட்டமைத்த அம்பேத்கர், லண்டனில் கல்வி கற்றபோது, அங்கு அவர் தங்கியிருந்த மூன்றடுக்கு வீட்டை, இன்னும் 15 நாட்களில் மகாராஷ்டிர அரசு வாங்கும் என்று கூறப் பட்டுள்ளது.
இதுகுறித்து சமூகநீதித் துறை அமைச்சர் ராஜ்குமார் பதோலே கூறியதாவது:
இந்த வீட்டை வாங்க கடைசி நாள் என்று எதுவுமே இல்லை. இன்னும் 2 நாட்களில் வீட்டை விற்பவருக்கும், அதனை வாங்கும் மகாராஷ்டிர அரசுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கின்றன. இதில் மாநில அரசுக்கு எந்தப் பணப் பிரச்சினையும் இல்லை. வீட்டை வாங்கும் நடவடிக்கையில் சில தடைகள் உள்ளன. ஆனால் அவற்றுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.
இன்றே வாங்கவில்லை என்றால் வீட்டை விற்க மாட்டேன், என்று வீட்டின் உரிமையாளர் கூறியதாகச் சொல்லப்படும் செய்திகள் பொய்யானவை.
அவர்கள் (காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ்) 15 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்தனர். அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று நாங்கள் முயற்சிக்கிறோம். எங்களைப் பின்னால் இழுக்கப் பார்க்கிறார்கள். இந்த அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்திக் கொடுக்க நினைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.