Published : 28 Apr 2020 06:17 PM
Last Updated : 28 Apr 2020 06:17 PM

கரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை ஆபத்தானது; செய்யக்கூடாது: மத்திய அரசு திடீர் எச்சரிக்கை

கரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அல்ல, இதுவெறும் சோதனை அளவில் தான் உள்ளது, இதுதொடர்பாக முடிவுகள் வரும்வரை யாரும் பிளாஸ்மா சிகிச்சை செய்ய வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கூட்டுமருந்து சிகிச்சை அளிக்கப்படு கிறது. இந்த சிகிச்சையில் மலேரியாமற்றும் மூட்டு வலி பிரச்சினை களுக்கு தீர்வு அளிக்கும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை இடம்பெறுகிறது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்கள் திடீரென்று கடுமையான நுரையீரல் பாதிப்பு மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழக்கின்றனர்.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில் செயற்கை சுவாசக் கருவியான வென்டிலேட்டரும் பயனளிக்காததால், சிகிச்சை முறையில் மாற்றத்தை ஏற்படுத்த டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி, வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்தை தானமாகப் பெற்று, அதில் இருந்து பிளாஸ்மாவை மட்டும் பிரித்து எடுத்து வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

சில மாநிலங்களில் இந்த சிகிச்சை சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட சில மாநிலங்கள் இந்த சிகிச்சைக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் அனுமதி கோரியுள்ளன.

இந்தநிலையில் பிளாஸ்மா சிகிச்சையை யாரும் செய்ய வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அதிகாரி லாவ் அகர்வால் இன்று கூறியதாவது:

பிளாஸ்மா சிகிச்சை என்பது இதுவரை உறுதி செய்யப்பட்ட சிகிச்சை அல்ல, இதுவெறும் சோதனை அளவில் தான் உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது. இதன் முடிவுகள் இன்னமும் வெளியாகவில்லை.

பிளாஸ்மா சிகிச்சை குறித்த கூடுதல் ஆய்வு தேவையப்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதற்கு ஒப்புதல் வரும் வரை பிளாஸ்மா சிகிச்சையை யாரும் செய்ய வேண்டாம். அப்பாடி செய்தால் அது கரோனா நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தி விட வாய்ப்புண்டு. கரோனா நோயாளிகள் சிலருக்கு உயிருக்கு ஆபத்தையும் இந்த சிகிச்சை ஏற்படுத்தி விடும். பிளாஸ்மா சிகிச்சை செய்வது தற்போதைய நிலையில் சட்டவிரோதமாகும். எனவே பிளாஸ்மா சிகிச்சை செய்வதை தற்போதைய சூழலில் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x