

வங்கியில் கடன் பெற்று வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் முதல் 50 கடன்காரர்கள் பட்டியலில் இருக்கும் நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி, விஜய் மல்லையா ஆகியோரின் ரூ.68 ஆயிரம் கோடி கடனை மோடி அரசு தள்ளுபடி செய்துள்ளது. இந்த உண்மையை நாடாளுமன்றத்தில் சொல்லாமல் மத்திய அரசு மறைத்துவிட்டது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் சாகேத் கோகலே தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை மனுவில், பிப்ரவரி 16-ம் தேதி வரை கடன் வாங்கி வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் முதல் 50 நபர்கள் பட்டியலை ரிசர்வ் வங்கியிடம் கேட்டிருந்தார்.
அதில் ரூ.68 ஆயிரம் கோடி கணக்கியல் ரீதியாக தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், அந்தப் பட்டியலையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்தது.
இதில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் தலைமறைவான விஜய் மல்லையா, மெகுல் சோக்ஸி, நிரவ் மோடி ஆகியோரின் கடன்களும் கணக்கியல் ரீதியாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் மத்திய அரசைக் கண்டித்து கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், “கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் முதல் 50 பேரின் பட்டியலை வெளியிடக் கோரி நாடாளுமன்றத்தில் நான் கேட்டபோது மத்திய நிதியமைச்சர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். இப்போது ரிசர்வ் வங்கி பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி உள்ளிட்ட பாஜகவின் பல நண்பர்கள் பெயர்கள் இருக்கின்றன. இதனால்தான் இந்த உண்மை நாடாளுமன்றத்தில் இருந்து மறைக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து 2019-ம் ஆண்டு செப்டம்பர் வரை மத்திய அரசு ரூ.6.66 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், “கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாத முதல் 50 பேரின் பட்டியல் வெளியாகியுள்ளது. இவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது ஏன் என பிரதமர் விளக்க வேண்டும்.
போலித்தனம், ஏமாற்றுத்தனம், தப்பி ஓடுதல் ஆகியவற்றை ஊக்கப்படுத்துவதை மத்திய அரசு கொள்கையாக வைத்திருக்கிறது. பிரதமர் பதில் அளிக்காதவரை ஏற்க முடியாது. மத்திய அரசின் தவறான முன்னுரிமைகள், நேர்மையற்ற நோக்கங்களைப் பிரதிபலிக்கிறது.
கரோனா வைரஸுக்கு எதிராக தேசம் போராடி வரும்போது, மாநிலங்களுக்கு வழங்கப் பணமில்லாமல் மத்திய அரசு இருக்கிறது. ஆனால், வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதவர்களின் ரூ.68,307 கோடியைத் தள்ளுபடி செய்துள்ளீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.