ஆடுகளை விற்று கரோனா நிவாரண நிதி: சுபைதாவின் தயாள குணம்  

சுபைதாவை வீட்டுக்குச் சென்று பாராட்டிய கொல்லம் எம்எல்ஏ முகேஷ்.
சுபைதாவை வீட்டுக்குச் சென்று பாராட்டிய கொல்லம் எம்எல்ஏ முகேஷ்.
Updated on
1 min read

கேரள மாநிலம் கொல்லத்தில் தேநீர்க் கடை வைத்திருக்கும் அறுபது வயதான சுபைதா, தான் வளர்த்து வந்த ஆட்டுக்குட்டிகளை விற்று முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்கு நிதி கொடுத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லம், கொச்சுபிலமூடு பகுதியில் உள்ள தன் வீட்டுக்குப் பக்கத்திலேயே டீக்கடை வைத்திருக்கிறார் சுபைதா. கூடவே தன் வீட்டிலேயே ஆடுகளும் வளர்த்து வருகிறார். அதில் இரண்டு ஆடுகளை விற்று அதில் தனக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ததுபோக, மிச்சம் இருந்த 5,510 ரூபாயை கொல்லம் மாவட்ட ஆட்சியர் அப்துல்நாசரிடம் கரோனா நிவாரணமாகக் கொடுத்திருக்கிறார். ஆட்சியர் அதை கேரள முதல்வரின் கரோனா நிவாரண நிதியில் சேர்க்க, இதைப் பற்றி ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது நெகிழ்ச்சியோடு தெரிவித்தார் முதல்வர் பினராயி விஜயன்.

சுபைதா இதுகுறித்து 'இந்து தமிழ் திசை'யிடம் கூறுகையில், ''சித்திரை 1-ம் தேதியை கனிகாணும் நிகழ்வாக உற்சாகத்தோடு கொண்டாடும் மரபு கேரளத்தில் இருக்கிறது. அப்போது பெரியவர்கள், சிறியவர்களுக்குப் பணம் கொடுப்பார்கள். இதற்கு ‘கைநீட்டம்’ என்று பெயர். அப்படிக் கைநீட்டமாகக் கிடைத்த பணத்தையும், அன்றாடச் சேமிப்புக் காசையும் குழந்தைகள், முதலமைச்சரின் நிவாரண நிதிக்குக் கொடுப்பதைப் பார்த்தேன். அதைப் பார்த்த பின்னர், நாமும் ஏதாவது செய்யவேண்டும் எனத் தோன்றியது. ஆனால், டீக்கடை வருமானத்தில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மிச்சம் இல்லை. இதைப் பத்தி என் வீட்டுக்காரர்கிட்ட சொல்லி வருத்தப்பட்டேன். நீ பொறுமையா இரு. உதவி செய்ய ஏதாவது வழிபிறக்கும்னு சொன்னாரு.

அப்போதான் நம்மகிட்ட இருக்குற இருபது ஆடுகளில் இரண்டு இளம் ஆடுகளை விற்றால் என்னன்னு கேட்டேன். அவரும் சம்மதிச்சாரு. 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற பணத்தில் வீட்டு வாடகை, மின்கட்டணம் செலுத்தியது போக மீதிப் பணத்தை நிவாரண நிதிக்குக் கொண்டுபோய்க் கொடுத்தேன். ஆரம்பத்தில் எங்க ஊரு போலீஸ் ஸ்டேஷனுக்குத்தான் போனேன். அவுங்கதான் இங்கெல்லாம் நிவாரணம் வாங்குறதில்லைன்னு, கலெக்டர்கிட்ட போய்க் கொடுங்கன்னு சொன்னாங்க'' என்றார்.

தனது மூன்று பிள்ளைகளுக்கும் திருமணம் முடிந்துவிட்ட நிலையில், கணவரோடு சேர்ந்து தேநீர்க் கடையை நடத்திவருகிறார் சுபைதா. பொதுமுடக்கத்தின் காரணமாக ஒருமாதமாகப் பூட்டியிருந்த தேநீர்க் கடையையும் இப்போதுதான் திறந்திருக்கிறார். கரோனா காலத்தில் இவரின் தயாள குணத்தைப் பார்த்துவிட்டு இவர் விற்ற ஆடுகளைத் திரும்ப வாங்கவும், இவரது கணவரின் இருதய சிகிச்சைக்கு உதவவும் பல தொலைபேசி அழைப்புகள் வந்தபோதும் அதையெல்லாம் மறுத்துவிட்டு வழக்கம்போல் தேநீர்க் கடைப் பணியில் மூழ்கிப்போயிருக்கிறார் சுபைதா.

இவரின் சேவை குணத்தைக் கவுரவிக்கும் வகையில், கொல்லம் சட்டப்பேரவை உறுப்பினர் முகேஷ் வீட்டுக்கே நேரில் சென்று சுபைதாவைப் பாராட்டியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in