

பெரும் கோடீஸ்வரர்களுக்கு 40 சதவீதம் வருமான வரி விதிக்கலாம் என்று அரசுக்கு வருவாயை உயர்த்தப் பரிந்துரை செய்த விவகாரத்தில், 50 இந்திய வருவாய்ப் பணி (ஐஆர்எஸ்) அதிகாரிகளைத் தவறாக வழிநடத்தியதாக 3 மூத்த வருவாய்ப் பணி அதிகாரிகள் மீது துறை ரீதியாக மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) நடவடிக்கை எடுத்து நோட்டீஸ் வழங்கியுள்ளது.
மூத்த ஐஆர்எஸ் அதிகாரிகள் சஞ்சய் பகதூர் (புலனாய்வுப் பிரிவின் முதன்மை இயக்குநர்), ஸ்ரீ பிரகாஷ் துேப (ஐஆர் அமைப்பின் இணை இயக்குநர்), பிரசாந்த் பூஷன் (வருமான வரித்துறை முதன்மை ஆணையர்) ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 15 நாட்களுக்குள் எழுத்துபூர்வமாக விளக்கம் அளிக்கவும், தனிப்பட்ட முறையில் விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஃபோர்ஸ் என்ற தலைப்பிலான (நிதி திரட்டும் ஆதார வழிகள் மற்றும் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கை) இந்தக் கொள்கைக் குறிப்பை ஐஆர்எஸ் அதிகாரிகள் வெளியிட்டிருந்தனர்.
அதில் ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு தற்போது 30 சதவீதம் விதிக்கப்படும் வரியை 40 சதவீதம் வரை உயர்த்தலாம். அதேபோல ரூ.5 கோடிக்கு மேலான நிகர சொத்து மதிப்பு உள்ளவர்களுக்கு வரி விதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கூடுதலாக கோவிட்-19 நிவாரண செஸ் என 4 சதவீதம் விதிக்கலாம். இதன் மூலம் ரூ.15 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.18 ஆயிரம் கோடி வரை கிடைக்கும் எனக் கணக்கிட்டுள்ளது. ரூ.10 லட்சத்துக்கு அதிகமான வருமானம் ஈட்டுவோருக்கு மட்டும் வரி விதிக்கலாம் போன்ற பல பரிந்துரைகள் இருந்தன.
இந்தப் பரிந்துரை நேற்று முன்தினம் சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகி, அனைவராலும் பகிரப்பட்டது. இதையடுத்து உஷாரான மத்திய நேரடி வரிகள் வாரியம் இதுபோன்ற பரிந்துரைகளை நாங்கள் தயார் செய்யக்கோரி 50 ஐஆர்எஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடவில்லை. அவர்களும் தலைமையின் அனுமதியின்றி இதைச் செய்துள்ளார்கள் என்று தெரிவித்தது.
இதையடுத்து, 50 இளம் அதிகாரிகளைத் தவறாக வழிநடத்தியதாக மூன்று மூத்த ஐஆர்எஸ் அதிகாரிகள் மீது மத்திய நேரடி வரிகள் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் இந்த 3 அதிகாரிகளும் மத்திய குடிமைப் பணி அதிகாரிகளுக்கான ஒழுக்க விதிமுறை 9 மற்றும் 3(1) (எக்ஸ்எக்ஸ்) ஆகியவற்றை மீறிவிட்டார்கள் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வட்டாரங்கள் கூறுகையில், “ஃபோர்ஸ் என்ற தலைப்பில் சில பரிந்துரைகளை 3 அதிகாரிகள் தன்னிச்சையாகத் தயாரித்துள்ளனர். இதில் துபே, பகதூர் ஆகிய இரு அதிகாரிகளும் தங்களுக்குக் கீழ் பணியாற்றும் இளம் அதிகாரிகளை இந்தப் பரிந்துரைகளைத் தயார் செய்யக் கோரியுள்ளனர்.
இதில் பூஷன் இந்தப் பரிந்துரைகளை மக்கள் அறியும்படி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த 3 அதிகாரிகளும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் மிக்கவர்கள், இவர்கள் 3 பேரும் கடமையிலிருந்து தவறியதோடு 50 இளம் அதிகாரிகளையும் தவறாக வழிநடத்தியுள்ளனர். நாடு பெரும் இக்கட்டான சூழலில் இருக்கும்போது இதுபோன்ற பரிந்துரைகள் மேலும் பதற்றத்தை உருவாக்கும்.
இந்தப் பரிந்துரைகள் அனைத்தையும் முறையான வழியில் மத்திய அரசுக்கு இந்த அதிகாரிகள் அனுப்பி இருந்தால் நிச்சயம் மத்திய அரசு பரிசீலனை செய்திருக்கும். முதன்மை ஆணையர்கள் அந்தஸ்தில் இருக்கும் இந்த 3 அதிகாரிகளும் வெளிப்படையாகப் பரிந்துரைகளை காண்பித்து சிக்கிக்கொண்டனர்” எனத் தெரிவித்தன.