

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்டுள்ள லாக்டவுன் மே 3-ம் தேதிக்குப்பின் தளர்த்தப்பட்டாலும், பள்ளிகள், கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து, ரயில், விமானப்போக்குவரத்து தொடர்ந்து இயங்க தடை செய்யப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் கடந்த மாதம் 24-ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் லாக் டவுனை மத்திய அரசு கொண்டு வந்தது. கரோனா பாதிப்பு குறையாததையடுத்து ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை 2-ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த லாக் டவுன் காலத்திலும் கரோனா வைரஸ் பாதிப்பு 26 ஆயிரத்தை எட்டியுள்ளது. 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு கொண்டுவருவதற்கு முன்பும், முதல் கட்ட லாக் டவுன் முடியும் முன்பும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். கடந்த மார்ச் 20-ம் தேதியும் ஏப்ரல் 2 மற்றும் 11-ம் தேதிகளிலும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில் கரோனா பாதிப்பு குறைவாகவும், பாதிப்பே இல்லாத மாவட்டங்களில் கடந்த 20-ம் தேதி முதல் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்த சூழலில் மே 3-ம் தேதிக்குப் பின் மீண்டும் லாக் டவுனை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பங்கேற்ற 9 மாநில முதல்வர்களில் புதுச்சேரி, மேகாலயா, மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளி்ட்ட 5 முதல்வர்கள் லாக்டவுனை நீட்டிக்கவே வலியுறுத்தியுள்ளனர்.
அதேசமயம், பொருளாதார நடவடிக்கையும் முக்கியம்,அதையும் தொடர்ந்து அனுமதிக்கவேண்டும் என்று பிரதமர் மோடி முதல்வர்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.மே 3-ம் தேதி பொதுஅடைப்பை நீ்க்குவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றாலும் அதுகுறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில் “ வரும் மே 3-ம் தேதிக்குப்பின் ஊரடங்கு உத்தரவை தளர்த்தலாமா அல்லது தொடருமா என்பது குறித்து இந்த வார இறுதியில்தான் முடிவு செய்யப்படும் அதுவரை அதில் ஊகம்தான் நிலவும்.
ஒருவேளை பொருளாதார நலன் கருதி லாக்டவுன் மே3-ம் தேதிக்குப்பின் நீக்கப்பட்டால், பள்ளிகள், கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள், வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதிக்கப்படாது. பேருந்து போக்குவரத்து, ரயில், விமானப் போக்குவரத்தும் குறைந்தபட்சம் மே 20ம்தேதி வரை இயங்க அனுமதிக்கப்படாது.
அதன்பின்புதான் கரோனா பாதிப்பின் சூழலை ஆய்வு செய்து அதுகுறித்து அரசு சி்ந்திக்கும். மாநிலங்களில் உள்ள பச்சை மண்டலங்களில் மட்டும் தனியார் வாகனங்கள் அனுமதி்கப்படலாம், ஆனால் ரயில்,விமானப் போக்குவரத்துக்கு இப்போதுள்ள சூழலில் வாய்ப்பு இல்லை.
மேலும் மே 3-ம் தேதிக்குப்பின் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கும், கூட்டமாக சமூக விழாக்கள், கொண்டாட்டங்கள், விழாக்கள் நடத்தவும் தடை இருக்கும்.
9 மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் பேசியதில் 5 முதல்வர்கள் லாக்டவுனை நீட்டிக்கவேண்டும் என்றும், தளர்த்தப்பட்டால் படிப்படியாக அவசரமில்லாமல் தளர்த்த வேண்டும் என்றும், பச்சை மண்டலங்களில் கவனமாக பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்க அனுமதிக் வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். மே 3-ம் தேதிக்குப்பின் ஊரடங்கு நீக்கப்படுமா அல்லதுதொடருமா என்பது குறித்த முடிவு சனிக்கிழமைக்கு முன்பாகவே எடுக்கப்படாது” எனத் தெரிவித்தனர்.