

டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 300 பேர், கரோனா நோயாளிகளுக்கு தங்கள் பிளாஸ்மாவை வழங்க முன்வந்துள்ளனர்.
கரோனா தொற்றுக்கு உள்ளாகிசிகிச்சைக்கு பின் குணமானவர்கள் அளிக்கும் ரத்தத்தில் பிளாஸ்மா தனியாகப் பிரித்தெடுக்கப்படுகிறது. பிறகு அதை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த பிளாஸ்மா சிகிச்சையால் கரோனா வைரஸால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்கள் குணமாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பிளாஸ்மாவை தானம் வழங்க முன்வரும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தப்லீக்-எ-ஜமாத்தின் தலைவர் மவுலானா முஹம்மது சாத்தும் ஒரு குரல் பதிவை வெளியிட்டிருந்தார். அதில் அவர், ஜமாத்தார்கள் அனைவரும் தங்கள் பிளாஸ்மாவை வழங்கி கரோனா நோயாளிகளின் உயிர்காக்க உதவ வேண்டும் எனக் கோரியிருந்தார்
இந்நிலையில், பிளாஸ்மாவை வழங்க விருப்பம் உள்ளவர்களின் பட்டியலை டெல்லி அரசு திரட்டத் தொடங்கியது. இவர்களில் சாதி,மத வேறுபாடுகள் இன்றி தங்கள்பிளாஸ்மாவை வழங்க பலரும் முன்வந்தபடி உள்ளனர். இதில், அதிக எண்ணிக்கையில் கரோனா தொற்று கொண்டு குணமடைந்தவர்கள் என்பதால், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச்சேர்ந்த ஜமாத்தார் தங்கள் பிளாஸ்மாவை வழங்க முன்வந்துள்ளனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’நாளேட்டிடம் டெல்லி அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் வட்டாரம் கூறும்போது, “சுல்தான்புரியில் உள்ள கரோனா முகாமைச் சேர்ந்த 4 ஜமாத்தினர் முதல் நபர்களாக பிளாஸ்மாவை வழங்கி உதவினர். தற்போது 300 ஜமாத்தினர் தங்கள் பிளாஸ்மாவை வழங்க முன்வந்துள்ளனர். ஒருவர் வழங்கும் பிளாஸ்மா 3 பேரின் உயிரைக் காக்க உதவுகிறது” என்றனர்.
வாணியம்பாடி தமிழர்
பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்வருபவர்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற உபாதைகள் இருக்கக் கூடாது. கரோனா சிகிச்சை பெற்று குணமானவர்களின் மருத்துவ விவரங்கள் ஏற்கெனவே டெல்லி அரசிடம் உள்ளது. அதில் இருந்து பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவ உகந்தவர்களிடம் ஒப்புதல் பெற்று அதைப் பெறும் பணியும் நடைபெற்று வருகிறது. இவர்களில் ஒருவராக நேற்று முன்தினம்தனது பிளாஸ்மாவை வழங்கி உள்ளார் வாணியம்பாடியைச் சேர்ந்த தமிழரான பாரூக் பாஷா(42).
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் சென்னை பல்லாவரத்தில் உள்ள பிரியாணி கடையின் ஊழியரான பாரூக் பாஷா தொலைபேசியில் கூறும்போது, “நபிகளார் காலத்திலும் உடலில் இருந்து ரத்தம் எடுத்து அளிக்கும் ஹிஜாமா என்ற சிகிச்சை முறை இருந்தது. இது, உடலில் இருந்து ரத்தம் எடுப்பதை இஸ்லாம் அனுமதிப்பதை காட்டுகிறது. ரமலான் மாதத்தில் நோன்பு முடித்து மாலை சென்று இரவு திரும்பினேன். இந்த புண்ணியமான காரியம் செய்த எனது உடலில் எந்த பாதிப்பையும் நான் உணரவில்லை” என்றார்.
மேலும் ஒருவர் குணமடைந்தார்
இதனிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் டெல்லி அரசு மருத்துவமனை ஒன்றில் பிளாஸ்மா சிகிச்சை பெற்று குணமாகி நேற்று வீடு திரும்பியுள்ளார்.
எனவே, தொற்றில் இருந்துகுணமானவர்களின் ரத்தத்தில்உள்ள பிளாஸ்மா உதவியால்கரோனா பாதிப்பு அடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.