

உலக நாடுகளை எல்லாம் கரோனா வைரஸ் தலைகீழாகப் புரட்டி போட்டுள்ளது. அதனால் அந்த வைரஸ் தோன்றியசீனா மீது உலக நாடுகள் கடும் கோபத்தில் உள்ளன. அத்துடன் சீன மக்கள் மீது வெறுப்பை காட்ட தொடங்கி விட்டனர். ஆஸ்திரேலியா உட்பட சில நாடுகளில் இன ரீதியாக ஒரு சில இடங்களில் சீனர்களை ஒதுக்கும் தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில், சீனாவைச் சேர்ந்தஇளம்பெண் ஸாங் அய்ஸி, இந்தியாவைச் சுற்றிப் பார்க்க கடந்த ஜனவரி கடைசியில் தனியாக வந்தார். கரோனா வைரஸ் பரவத் தொடங்கியவுடன் மத்திய அரசுபல கட்டுப்பாடுகளை விதித்தது. அதில்மார்ச் மாதம் மத்திய அரசு நாடு முழுவதும் முழு ஊரடங்கை அறிவித்தது. அத்துடன், பேருந்து, ரயில், விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டன. இதனால் ஸாங் அய்ஸி இந்தியாவில் இருந்து சீனா செல்ல முடியவில்லை. சீனாவில் உள்ள தாயையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
அவருக்கு யாரும் தங்குவதற்கு இடம் தர முன்வரவில்லை. இவர் வெளியில் செல்லும் போது ‘சீன வைரஸ்’ என்றே சிலர் இவரை அழைத்துள்ளனர். இதனால் மனரீதியாக ஸாங் பாதிக்கப்பட்டுள்ளார். கடைசியில், ஹரியானா மாநிலம்குருகிராமத்தின் பண்ட்வாரி கிராமத்தில் உள்ள ‘எர்த் சேவியர் பவுண்டேஷனில்’ ஸாங்கை பராமரிக்க குருகிராம் போலீஸார் ஏற்பாடு செய்தனர்.
இதுகுறித்து பவுண்டேஷனின் நிறுவனர் ரவி கல்ரா கூறும்போது, ‘‘சீன நாட்டைசேர்ந்தவர் ஸாங் என்பதால், அவர் மனிதர்இல்லை என்றாகிவிடாது’’ என்றார்.
குர்காவ்ன் ஏசிபி கரண் கோயல் கூறும்போது, ‘‘சீனப் பெண் ஸாங்குக்கு உதவி செய்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்தப் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க 4 பெண் போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.
இதற்கிடையில் ஸாங் அய்ஸிக்கு கரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. இதை அறிந்து ஸாங் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஸாங் தற்போது மன அழுத்தம் குறைந்து அனைவருடனும் சகஜமாகப் பழகுகிறார். மேலும், ஸாங் அய்ஸியை சீனாவுக்கு அனுப்பி வைப்பது குறித்து, இங்குள்ள சீன தூதரகத்துடன் பேசி வருகின்றனர்.