Last Updated : 27 Apr, 2020 08:23 PM

 

Published : 27 Apr 2020 08:23 PM
Last Updated : 27 Apr 2020 08:23 PM

நோய் எதிர்ப்பு சக்தி பெற ஏழைத் தொழிலாளர்களுக்கு நல்ல உணவு வேண்டும்; அரசின் உணவு தானியக் கிடங்குகள் எப்போது பயன்படுத்தப்படும்?- மாயாவதி கேள்வி

நோய் எதிர்ப்பு சக்தி பெற ஏழைத் தொழிலாளர்களுக்கு நல்ல உணவு வேண்டும். அரசின் உணவு தானியக் கிடங்குகள் எப்போது பயன்படுத்தப்படும் என்று மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த மார்ச் 24-ம் தேதி லாக் டவுன் அமலுக்கு வந்ததிலிருந்து புலம்பெயர் தொழிலாளர் கடும் அவதிக்குள்ளாயினர். தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டுமென பல்வேறு வாகனங்களிலும் நடைபயணமாகவும் ஊருக்குச் சென்றனர். பலர் எதிலும் செல்ல வழியின்றி அவர்கள் பணியாற்றிவந்த நகரங்களிலேயே சிக்கிக்கொள்ள நேரிட்டது. எனினும் வேலையுமில்லை ஊதியமுமில்லை என்ற நிலையில் அவர்கள் நிலைமை மிகவும் மோசமானது.

மாநில அரசுகளும் தன்னார்வ அமைப்புகளும் அவர்களுக்கு உணவளித்துப் புகலிடம் அளித்தாலும் அவர்கள் தொடர்ந்து சொந்த ஊருக்குச் செல்லவேண்டுமென்ற தவிப்பிலேயே உள்ளனர்.

இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

''கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்த லாக் டவுனை அமல்படுத்தியதால் மில்லியன் கணக்கான மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எப்படியாவது முறையான ஏற்பாடுகளைச் செய்து, அவர்களைப் பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்கு அனுப்பியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளும், கரோனா வைரஸ் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். உதவியற்ற மில்லியன் கணக்கான ஏழைகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

இல்லையெனில், பசியால் அவதிப்படும் இந்த மக்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கொடிய கரோனா வைரஸிலிருந்து தங்களைக் காப்பாற்றவும் எப்படி முடியும்? அரசாங்கக் கிடங்குகளில் சேமிக்கப்படும் உணவு தானியங்கள் எப்போது பயன்படுத்தப்படும்?

புலம்பெயர்ந்தோருக்கு உடனடியாக நிதி உதவியும் அளிக்க வேண்டும்''.

இவ்வாறு மாயாவதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x