

சீனாவில் இருந்து இரு நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவியை மாநில அரசுகள் பயன்படுத்த வேண்டாம். அதை மீண்டும் திருப்பி அனுப்புங்கள் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
சீனாவிலிருந்து வாங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவியில் பரிசோதனை முடிவுகள் 95 சதவீதம் தவறாக வருவதாக சமீபத்தில் ராஜஸ்தான் மாநில அரசு குற்றம் சாட்டியது. கரோனா நோயாளிகளுக்குப் பரிசோதனை செய்தால் கூட நெகட்டிவாக காண்பிக்கிறது என்று ஐசிஎம்ஆரிடம் புகார் தெரிவித்தது. இதையடுத்து, நாடு முழுவதும் ரேபிட் டெஸ்ட் கருவியைப் பயன்படுத்துவதை நிறுத்த ஐசிஎம்ஆர் உத்தரவிட்டது.
இந்நிலையில் ஐசிஎம்ஆர் அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தல் விடுத்து இன்று கடிதம் எழுதியுள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
''சீனாவின் குவாங்ஜூ நகரைச் சேர்ந்த வாட்போ பயோடெக், ஜூஹாய் லிவ்ஸன் டயாக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட் களத்தில் பரிசோதிக்கப்பட்டது. இதிலிருந்து கிடைக்கும் முடிவுகளில் பெரும் வேறுபாடு இருக்கிறது. ஆனால், முதலில் பரிசோதித்தபோது துல்லியமான முடிவுகளைக் கொடுத்தது.
ஆதலால், சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவிகளை மாநில அரசுகள் பயன்படுத்துவதை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அந்த நிறுவனங்களிடமே சப்ளையர்கள் மூலம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் திருப்பி அனுப்பப்பட உள்ளன. களப் பரிசோதனையில் அறிவியல் அனுமானங்களை ஆய்வு செய்தபோது, இரு நிறுவனங்களின் பொருட்களும் தரக்குறைவாக இருப்பதால் ரத்து செய்யப்படுகிறது.
இந்த சப்ளை நிறுவனங்களுக்கு ஐசிஎம்ஆர் சார்பில் எந்தவிதமான பணமும் செலுத்தவில்லை. எந்தவிதமான பணமும் முன்கூட்டியே வழங்கப்படவும் இல்லை. இந்திய அரசுக்கு இந்த ஆர்டரை ரத்து செய்ததால், ஒரு ரூபாய்கூட இழப்பு ஏற்படாது''.
இவ்வாறு ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
அதேசமயம், ரேபிட் கருவிகளைப் பயன்படுத்தி வரும் மாநில அரசுகள் இதைக் கண்காணிப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்றவகையில் கரோனா வைரஸ் கண்டறிய ஆர்டி-பிசிஆர் ஸ்வாப் பரிசோதனை மூலமே கண்டறிய முடியும் என அறிவுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.