

நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் இருப்பதாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விஎச்பி தலைவர் சாத்வி பிராச்சி மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 20 எம்பிக்கள் கோரியுள்ளனர்.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி, தெலங்கானா ராஷ்டிர சமிதி உறுப்பினர் கே.கேசவ ராவ் உள்ளிட்ட அவையின் மூத்த உறுப்பினர்கள் 20 பேர், பிராச்சிக்கு எதிராக நோட்டீஸை மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரியிடம் அளித்துள்ளனர்.
அவையின் காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, அம்பிகா சோனி, டி.ராஜா, நீரஜ் சேகர் (சமாஜ்வாதி), தபன் சென் (மார்க்சிஸ்ட்) உள்ளிட்டோர் அவை உரிமைகளை மீறியதாக பிராச்சிக்கு எதிராக அவைத் தலைவரிடம் கொடுத்த மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
சாத்வி பிராச்சி கூறியது என்ன?
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதற்கு எழும் எதிர்ப்பு குறித்து நேற்றுமுன்தினம் பேசிய பிராச்சி, இந்திய நாடாளுமன்றத்திலேயே ஒன்றிரண்டு தீவிரவாதிகள் இருக்கின்றனர். தீவிரவாதி என நீதிமன்றத்திலேயே நிரூபிக்கப்பட்ட நிலையில் அந்த தீவிரவாதிக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் தீவிரவாதிகள்தான் என்று அவர் தெரிவித்தார்.